அரசியல்

காங்கிரஸ் குறி வைக்கும் மதுரை வடக்கு... கோ.தளபதிக்கு சிக்கல்!

செய்திப்பிரிவு

‘பூத் கமிட்டி கூட போட ஆள் இல்லாத கட்சி, தொகுதிக்கு 2 ஆயிரம், 3 ஆயிரம் வாக்குகளை மட்டுமே வைத்துள்ள கட்சி’ என்று சமீபத்தில் மிகக் கடுமையாக காங்கிரஸை சாடினார் மதுரை திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி. மேலும், காங்கிரஸ் எம்பி-க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோருக்கு அடுத்தமுறை ‘சீட்’ கொடுக்கக் கூடாது என தலைமைக்கு வேண்டுகோள் அவர் விடுத்தார்.

யதார்த்தமாக தனது பாணியில் கோ.தளபதி பேசிவிட்டாலும், இது காங்கிரஸார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸார் பலரும் தொடர்ந்து திமுகவை குறிவைத்து விமர்சித்த நிலையில், 100 சதவீதம் சரியான கருத்தை தைரியமாக கோ.தளபதி முன்வைத்தார் எனக் கூறி திமுக தரப்பில் பலரும் ஆதரவு தெரிவித்தனர். கோ.தளபதிக்கு 2 காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது மதுரை வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்துவேன், என்று மாணிக்கம் தாகூர் வெளிப்படையாகவே தெரி வித்திருந்தார்.

இரு கட்சியினரிடையே கடும் விவாதப்பொருளான நிலையில், “கூட்டணி, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சியினர் மீதான கருத்துகளை பொதுவெளியில் விவாதிப்பதை தவிர்க்க வேண்டும்” என திமுக தலைமை கட்டுப்பாடு விதித்தது. இந்நிலையில், கோ.தளபதியின் மதுரை வடக்கு தொகுதியை கேட்டுப்பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

          

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸின் விருப்ப தொகுதிகளில் மதுரை வடக்கு, மத்தி ஆகிய 2 தொகுதிகள் உள்ளன. மத்திய தொகுதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் உள்ளதால் அந்தத் தொகுதியை பெறுவது கடினம் என்பதால், வடக்கு தொகுதிக்கு தீவிரமாக குறி வைக்கப்படுகிறது. கோ.தளபதி வடக்கு தொகுதியில் போட்டியிட அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். தொகுதி முழுவதும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை கொடுத்து வருகிறார். இப்படி தொகுதியை தயார்படுத்தி வைத்திருக்கும் நிலையில், காங்கிரஸார் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

காங்கிரஸை கோ.தளபதி விமர்சித்த நிலையில், இதற்கு பழி வாங்க அவரது தொகுதியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டே செயல்படுகிறதா என்ற விமர்சனம் திமுகவினரிடம் எழுந்துள்ளது. ஏற்கெனவே மதுரை மாநகரில் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும், உள்ளூர் திமுகவினருக்கும் முட்டல், மோதல் முடியாத நிலையில், அக்கட்சி குறித்து விமர்சனம் செய்ய முடியாமல் திமுகவினர் தவித்து வந்தனர்.

தற்போது காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்யக் கூடாது என்று வாய்ப்பூட்டு போடப்பட்டுள்ளதால், கூட்டணியில் இருப்பதாலேயே இவர்களின் அனைத்து விமர்சனங்களையும் சகித்துக் கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும் என கட்சி மேலிடத்தின் நடவடிக்கை குறித்து மதுரை மாவட்ட திமுகவினர் புலம்புகின்றனர். இந்​நிலை​யில்தான் ‘மதுரை வடக்​குத் தொகு​தி​யில் காங்​கிரஸ் கட்​சி​யின் வேட்​பாள​ருக்கு கை சின்​னத்​தில் வாக்​களி​யுங்​கள்’ என மதுரை வடக்கு தொகுதி காங்​கிரஸ் பெயரில் திடீரென போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டன.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மதுரை மாநகர் மாவட்ட காங்​கிரஸ் தலை​வர் நல்​லமணி, “தி​முக-வுக்​கும் காங்​கிரஸுக்​கும் இடை​யில் இருக்​கும் நல்​லுறவை கெடுக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் யாரோ மர்ம நபர்​கள் இதுபோன்று போஸ்​டர்​களை ஒட்​டி​யுள்​ளனர். இது தொடர்​பாக கட்சி மேலிடத்​திற்கு தகவல் தெரி​வித்​துள்​ளோம். இச்​செயலில் ஈடு​பட்​ட​வர்​கள் யார் என்​பது குறித்து விசா​ரித்​துக் கொண்​டிருக்கிறோம். அது எங்​கள் கட்​சி​யின​ராக இருந்​தால், அவர்​கள் மீது உரிய நடவடிக்கை எடுப்​போம். மாற்​றுக் கட்​சி​யின​ராக இருந்​தால் அவர்​கள் குறித்து காவல்​துறை​யில் புகார் அளிப்​போம்” என்​றார்.

தேர்​தல் கூட்​டணி தொடர்​பாக டெல்​லி​யில் திமுக துணைப் பொதுச் ​செய​லா​ளர் கனி​மொழி ராகுல் காந்​தியை சந்​தித்​துப் பேசி இருக்​கும் நிலை​யில், திமுக-வை சீண்​டிப் பார்க்​கும் வித​மாக காங்​கிரஸ் பெய​ரால் மதுரைக்​குள் ஒட்​டப்​பட்​டுள்ள போஸ்​டர்​கள் இரண்டு கட்சிகளுக்​குள்​ளும் பரபரப்பை உண்டாக்கி இருக்​கிறது.

SCROLL FOR NEXT