அரசியல்

பாஜக, அதிமுக போட்டாபோட்டி... நிலக்கோட்டை தொகுதி யாருக்கு?

செய்திப்பிரிவு

தொடர் வெற்றிகளை தந்து அதிமுகவின் கோட்டையாக விளங்கும் நிலக்கோட்டை தொகுதியில், அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவினர் சுவர்களில் சின்னம் வரைந்து பிரச்சாரத்தை தொடங்கியதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதி அதிமுக தொடர் வெற்றிபெறும் தொகுதிகளில் ஒன்றாக உள்ளது. எளிதாக வெற்றிபெறும் தொகுதி என்பதால் அதிமுக தலைமை இந்த தொகுதியை யாருக்கும் விட்டுத் தராது.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னமும் ஏற்படவில்லை. எந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் நிலக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. அன்பழகன், தற்போது பாஜகவில் இணைந்து அக்கட்சியின் தமிழ் வளர்ச்சிக் கழக மாநில அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

          

இந்த தொகுதியில் அன்பழகன் மீண்டும் போட்டியிட ஆர்வம்காட்டி வருகிறார். இதையடுத்து கூட்டணிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், தற்போதே தாமரை சின்னத்தை சுவர்களில் வரைந்து பிரச்சாரத்தை துவக்கிவிட்டார் அன்பழகன். எம்ஜிஆர் போல் வேடமணிந்த ஒருவருடன் சென்று வாக்கு சேகரிக்கவும் துவங்கிவிட்டார் அன்பழகன்.

நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ.வாக மூன்று முறை வெற்றிபெற்ற தேன்மொழி உள்ளார். இந்த முறையும் தேன்மொழிக்கு தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என அதிமுகவினரே கூறிவரும் நிலையில், இடையில் பாஜக சின்னம் வரைந்து பிரச்சாரத்தை துவக்கியுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT