தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறஉள்ளது. 5 மாநிலங்களிலும் மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனிடையே, ஐந்து மாநிலத் தேர்தல் தொடர்பாக ‘மேட்ரிஸ் - ஐஏஎன்எஸ்’ நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் கவனம் ஈர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 இடங்களில், திரிணமூல் காங்கிரஸ் 155-ல் இருந்து 170 தொகுதிகள் வரையிலும், பாஜக 100-ல் இருந்து 115 தொகுதிகள் வரையிலும் கைப்பற்றும் என அந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று கணிக்கப்பட்டாலும், இம்முறை திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களம் குறித்து ‘மேட்ரிஸ் - ஐஏஎன்எஸ்’ வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்பு தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 இடங்களில் அதிமுக - பாஜக கூட்டணி 114-ல் இருந்து 127 தொகுதிகள் வரைலும், திமுக கூட்டணி 104-ல் இருந்து 114 இடங்கள் வரையிலும், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 6-ல் இருந்து 12 இடங்கள் வரையிலும் கிடைக்கும் என்று அந்தக் கருத்து கணிப்பு கூறியுள்ளது.
அசாமில் பாஜக பெரும்பான்மையான இடங்களை வென்று ஆட்சியை தக்கவைக்க வாய்ப்புள்ளதாகவும், கேரளாவில் இடது முன்னணி, காங்கிரஸ் கூட்டணி இடையே இழுபறி நிலவும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.