டெர்ரி நகரம் வெளியில் பார்ப்பதற்கு ஓர் அழகான, அமைதியான நகரமாகத் தோன்றினாலும், உள்ளே பல பயங்கர ரகசியங்களை மறைத்து வைத்திருக்கிறது. இனவெறி, பாலின சமத்துவமின்மை போன்ற சமூகப் பிரச்சினைகள் ஒருபுறம் என்றால், கூடவே மனிதர்களின் பயத்தின் மூலம் உயிர் வாழும் ஒரு தீய சக்தியும் ஒளிந்து கொண்டிருக்கிறது.
பென்னிவைஸ் என்ற பெயரில் ஒரு சர்க்கஸ் கோமாளி உருவத்தில் 27 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயிர்பெற்று குழந்தைகளை தின்று வாழும் அந்த அமானுஷ்ய ஜந்துவின் பின்னணி என்ன? அதை வைத்து அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்ற நினைக்கும் ராணுவ ஜெனரல், இவை அனைத்தையும் தடுக்க நினைக்கும் சில சிறுவர்கள்... இதுதான் It: Welcome to Derry தொடரின் மையக்கரு.
‘இட்’ நாவல், திரைப்படங்களின் முன்கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர், 8 எபிசோட்களாக வெளியாகியுள்ளது. வெறும் திகில் தொடராக மட்டுமல்லாமல், 60-களில் அமெரிக்காவில் நிலவிய பனிப்போர் அச்சம் மற்றும் சிவில் உரிமைப் போராட்டங்கள் போன்ற அரசியல் பின்னணிகளையும் இணைத்துப் பேசுகிறது.
இதுவரை வெளியான ‘இட்’ படைப்புகளில் மிக ஆழமாக அரசியலை பேசியது இதுவாகத்தான் இருக்கமுடியும். முந்தைய இரண்டு படங்களில் பென்னிவைஸ் ஆக நடித்த பில் ஸ்கார்ஸ்கார்ட் இதிலும் தன்னுடைய ஆளுமையை நிரூபித்துள்ளார். ஜோக்கர் கதாபாத்திரம் என்றால் எப்படி ஹீத் லெட்ஜர் என்றாகிப் போனதோ அதுபோல இனி பென்னிவைஸ் என்றால் பில் ஸ்கார்ஸ்கார்ட் என்று சொல்லும் அளவுக்கு அற்புதமான நடிப்பு.
ஸ்டீஃபன் கிங் எழுத்தில் உருவாகி கிளாசிக் படைப்புகளாக மாறிப் போன ‘தி ஷைனிங்’, ‘தி ஷஷாங்க் ரிடெம்ப்ஷன்’ போன்ற படங்களின் குறியீடுகளும் ஆங்காங்கே இடம்பெறச் செய்தது புத்திசாலித்தனமான ஐடியா. முதல் எபிசோடே மிக விறுவிறுப்பாக பார்ப்பவர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு எபிசோடுகள் நிதானமாக சென்றாலும், பென்னிவைஸ் அறிமுகத்துக்குப் பிறகு தொடர் தீயாய் பறக்கிறது. குறிப்பாக இறுதி இரண்டு எபிசோடுகள் எழுதப்பட்ட விதமும், அதை காட்சிப்படுத்திய விதமும் அட்டகாசம்.
கடைசி எபிசோடில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தின் எதிர்காலத்தை பென்னிவைஸ் சொல்வதன் மூலம் முந்தைய படங்களுடன் இந்த தொடரை இணைத்த விதம், இயக்குநரின் புத்திசாலித்தனத்துக்கு ஒரு சான்று.
பல இடங்களில் ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ தொடரை நினைவூட்டினாலும், அதைப் போலவே இந்தத் தொடரும் திகில், த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் ஒரு திகட்டாத விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.