“இது நல்லதல்ல. தொழிற்சாலை நடைமுறைகள் பலவும் வெள்ளியை சார்ந்துள்ளன” என்று கடந்த டிசம்பர் 30, 2025 அன்று டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். வெள்ளி ஏற்றுமதிக் கொள்கையில் சீனா செய்த திருத்தம் மீது கொண்ட கவலையின் வெளிப்பாடு இது.
தங்கம் ஓர் உன்னத உலோகம் என்றால் வெள்ளி அதன் உடன் பிறந்தது. அந்த உன்னத உலோகத்தின் நிழலிருந்து வெள்ளி விடுபட ஆரம்பித்திருக்கிறது என்று அண்மையில், வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் தெரிவித்திருந்தார். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, சாமானியர்களும் இனி தங்கம் வாங்குவது பெருங்கனவு. அதனால் வெள்ளியில் தங்கம் முலாம் பூசிய நகைகள் பக்கம் திரும்புவோம் என்று நகைக்கடைகளில் அதற்கு தனி செக்ஷன்களே உருவாக்கும் அளவுக்கு தங்கள் கவனத்தை வெள்ளியின் பக்கம் திருப்பிவிட்டனர்.
ஜனவரி 1, 2026 தொடங்கி வெள்ளி ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை சீனா விதித்துள்ளது. அதன்படி சீன நிறுவனங்கள் வெள்ளி ஏற்றுமதி செய்ய அரசு லைசன்ஸ் பெற வேண்டும். அவ்வாறாக அரசிடம் முறையாக உரிமம் பெற்ற பெரிய நிறுவனங்கள் மட்டுமே வெள்ளியை ஏற்றுமதி செய்ய முடியும். இந்த புதிய விதியின்படி சிறு, குறு ஏற்றுமதியாளர்களால் வெள்ளியை ஏற்றுமதி செய்ய இயலாது.
வெள்ளி ஏற்றுமதியில் 60 முதல் 70 சதவீதம் வரையிலான உலகளாவிய விநியோகத்தை சீனா தான் கட்டுப்படுத்துகிறது. அப்படியிருக்க. சீனா தனது ஏற்றுமதியில் ஒரு சிறிய கெடுபிடியை செய்தாலும் கூட அது சரவதேச விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். இதற்கு முந்தைய காலகட்டங்களில் பல்வேறு அரிய கனிம வளங்கள் மீதும் சீனா தனது ஆதிக்கத்தை இப்படித்தான் உறுதி செய்தது.
பல்வேறு தொழிற்சாலைகளிலும் வெள்ளியின் தேவை அதிகரித்துள்ளதால், தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாகவே வெள்ளியின் சப்ளை செயினில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த இடைவெளி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2025-ல் சர்வதேச தேவை என்பது கிட்டத்தட்ட ஒன்றேகால் பில்லியன் அவுன்ஸ் என்றிருந்த நிலையில், விநியோகம் ஒரு பில்லியன் அவுன்ஸாக இருந்தது. இப்போது சீனா வெள்ளி ஏற்றுமதிக் கொள்கையால் இந்த வித்தியாசம் இன்னும் மோசமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளியின் தேவை இப்போது சோலார் பேனல் தயாரிப்பு, மின் வாகனங்கள் தயாரிப்பு, மின்னனு சாதனங்கள் உற்பத்தி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு என ஒட்டுமொத்த வெள்ளித் தேவையில் 50 முதல் 60 சதவீதம் உள்ளது. இந்தத் தேவையும், தட்டுப்பாடும், சீனாவின் கெடுபிடியும்தான் வெள்ளியின் விலை ஜனவரி 12-ம் தேதி புதிய உச்சத்தைத் தொட மிக முக்கியக் காரணம்.
கடந்த ஆண்டு சர்வதேச அளவில் வெள்ளி இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு இந்தியா ரூ.82,800 கோடி மதிப்பிலான வெள்ளியை இறக்குமதி செய்தது. இது அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44% அதிகமாகும். தேவை அதிகரித்துள்ள நிலையில், வெள்ளியின் விலை ஒரு கிலோ 3 லட்சம் ரூபாயையும், ஒரு கிராம் விலை முந்நூறு ரூபாயையும் தாண்டிவிட்டது.
சீன நெருக்கடி ஒருபுறம் இருப்பதுபோல், வெள்ளி என்பது தனியாக வெட்டியெடுக்கப்படும் உலோகமாக அல்லாது தங்கச் சுரங்கங்கள், பெரும்பாலும் ஜிங்க், காப்பர் சுரங்கங்களில் ஒரு உப பொருளாகவே கிடைக்கிறது. புதிய சுரங்கங்களை உருவாக்குவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது தேவைப்படும், வெள்ளி மறுசுழற்சி என்பதும் போதுமான அளவில் இல்லை ஆகியனவும் வெள்ளி பற்றாக்குறைக்கு ஒரு காரணம்.
சூரிய ஆற்றல் மின்கலங்கள், மின்சாரபேட்டரி வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் என புதிய தொழில்நுட்பங்கள் எதுவாக இருந்தாலும், வெள்ளியை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தும் சூழலில், வெள்ளி இனி பிரகாசமான உலோகமாகவே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளி விலை உயர்வும், அது ஆபரணச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும், வெள்ளி விலை உயர்வும், அது ஆபரணச் சந்தையில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும், சென்னை தங்க நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் கேட்டபோது, “வெள்ளி விலை சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. இது வருங்காலங்களில் இன்னும் அதிகமாகவே உயரும்.
வெனிசுலா ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரீன்லாந்து அக்கிரமிப்பை ட்ரம்ப் திட்டமிடுவது, ரஷ்யா - உக்ரைன் போர், இஸ்ரேல் - காசா மோதல், ஈரான் உள்நாட்டுப் பிரச்சினை போன்ற புவி அரசியல் சர்ச்சைகள், பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி, டாலரின் மதிப்பு சரிவு இவற்றுடன் சீனாவின் ஏற்றுமதிக் கொள்கை எனப் பல்வேறு விஷயங்களும் சேர்ந்துதான் வெள்ளி விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. தங்கத்தைப் போல் வெள்ளியையும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகக் கருத, தொழில் துறையில் அதன் தேவை அதிகரித்துள்ளது மிக முக்கியக் காரணம்.
பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, சாமானியர்களும் கூட வெள்ளி மீது இந்தச் சூழலில் முதலீடு செய்யலாம். வரும் ஏப்ரலில் இருந்து வெள்ளியையும் வங்கிகளில் அடகுவைத்து பணம் பெறுவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை உயர்ந்துள்ளதால் வெள்ளி ஆபரணங்கள் மீது மக்கள் கவனம் திரும்பியுள்ளது. தங்கம் முலாம் பூசிய வெள்ளி ஆபரணங்களை மக்கள் ஆர்வமாக வாங்குவதும் அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே 9 காரட் தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை கிடைத்துள்ள நிலையில், தங்கத்துக்கு மாற்றாக முழுக்க முழுக்க வெள்ளியை சார்ந்திருக்காமல், 9 காரட் தங்க ஆபரணங்கள் சந்தைக்கு வரும். பல்வேறு சூழல்களையும் வைத்துப் பார்க்கும்போது வெள்ளி விலை உயர்வும், அதற்கான தேவையும் இனி குறைவதற்கு வாய்ப்பில்லை” என்றார் சலானி. எனினும், ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி என எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில், தங்களுக்கு ஏற்ற வகையில் நேரடியாக நிதி ஆலோசகரின் பரிந்துரைகளைக் கேட்டறிந்து முடிவு செய்வது நன்மை பயக்கும்.