பொது

‘வாட்ஸ்ஆப்’பில் ‘யூசர்நேம்’ ஏன்? - மத்திய அரசின் கேள்வியும், மெட்டா விளக்கமும்

செய்திப்பிரிவு

வாட்ஸ்ஆப் செயலியில் பயனர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை பகிராமல், அதற்கு மாற்றாக யூசர்நேம் எனப்படும் பயனர் பெயரை பயன்படுத்தும் வகையிலான அம்சம் அறிமுகமாக உள்ளது. இது வாட்ஸ் ஆப் செயலியில் மிக முக்கிய பிரைவசி அப்டேட் ஆக பார்க்கப்படுகிறது. இந்த அம்சம் சார்ந்து பயனர்கள் தங்களுக்கு தேவையான பயனர் பெயரை பதிவு செய்யும் வசதியை வாட்ஸ் அப் இந்தியாவில் தொடங்கி உள்ளது. மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பயன்பாட்டில் உள்ள யூஸர் நேமையும் பயனர்கள் இதில் தேர்வு செய்ய முடியும்.

அதன் தொடர்ச்சியாக, வாட்ஸ் ஆப்​பில் மோசடிகள் மற்றும் ஆள்​மாறாட்ட அபா​யங்​களை சுட்​டிக்​காட்டி மெட்டா நிறு​வனத்​திற்கு மத்​திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்காக கொண்டுவரப்பட்ட யூசர்நேம் அம்சம் அமல்படுத்துவதை, ஆலோசனைகள் முடியும் வரை நிறுத்தி வைக்கும்படி மத்திய அரசு கூறியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் ஆப் வெளி​யிட்​டுள்​ள அறிக்கையின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

‘யூசர்நேம் அம்​சம் மூலம் பயனர்​கள் தங்​களின் தொலைபேசி எண்களைப் பகிர்ந்து கொள்​ளாமலேயே தனித்​து​வ​மான பயனர் பெயர்களை உரு​வாக்கி வாட்ஸ் ஆப்​பில் இணை​ய​லாம். பயனர் பெயர்​கள் கட்டாயமில்லை, அவற்றை அறி​முகமில்​லாதவர்​கள் தேட முடி​யாது, பயனர்​கள் கூடு​தலாக ஒரு ‘பயனர் பெயர் கடவுச் சொல்​லை​யும் சேர்த்​துக் கொள்​ளலாம். இதன் மூலம் ஒரு​வர் உங்களைத் தொடர்புகொள்ள பயனர் பெயர் மற்​றும் கடவுச் சொல் ஆகிய இரண்​டும் அவருக்​குத் தெரிந்​திருக்க வேண்​டும்.

பிரபலங்​கள், அரசு நிறு​வனங்​கள் மற்​றும் மெட்டா நிறுவனத்​தால் சரி​பார்க்​கப்​பட்ட கணக்​கு​கள் உள்​ளிட்ட நன்கு அறியப்​பட்ட பெயர்கள் முன்​ப​திவு செய்து வைக்கப்பட்​டுள்​ளன. அதனால் அவற்றை உண்​மை​யான உரிமை​யாளர்​கள் மட்​டுமே பெற முடியும். மோசடி செய்பவர்​களுக்கு எதி​ராக நடவடிக்கை எடுக்க ‘பிளாக்' மற்​றும் 'ரிப்​போர்ட்' போன்​றவை கண்காணிக்கப்படுகின்றன. பயனர் பெயர் கட்​டா​யம் இல்​லை.

ஒரு பொது​வான பெயரை யாராவது ஏற்​கெ​னவே பெற்றிருந்​தால், ‘யூசர்​நேம் ஜெனரேட்​டர்'-ஐப் பயன்படுத்தவும். வாட்​ஸ்​அப்​பில் உங்களால் ஒரு தொலைபேசி எண்​ணைத் தேட முடி​யாதது போலவே, ஒரு பயனர் பெயரை​யும் தேட முடி​யாது. உங்களை யாரும் தொடர்​பு​ கொள்​வதைத் தடுப்​ப​தற்​கான சிறந்த வழி, ஒரு பயனர் பெயர் கடவுச் சொல்லை சேர்ப்​பதும் வாட்ஸ் ஆப்பிற்கு மட்டுமே​யான ஒரு தனித்​து​வ​மான பயனர் பெயரைத் தேர்ந்தெடுப்பதும் ஆகும்.

கடவுச் சொல் உங்​கள் பயனர் பெயருடன் நீங்​கள் ஆன் செய்து கொள்​ளக்​கூடிய கூடு​தல் பாது​காப்பு அடுக்கு ஆகும். உங்​கள் பயனர் பெயர் மூலம் வரும் புதிய தொடர்புகளை நிறுத்த, எந்த நேரத்​தி​லும் உங்​கள் கடவுச் சொல்லை நீங்​கள் மாற்றி கொள்ளலாம்.

அறிமுகமில்​லாத நபர்​கள் பற்​றிய விவரங்​களு​டன் கூடிய எச்சரிக்கைகள், அதாவது அவர்​கள் புதிய கணக்​கா, நீங்கள் ஒரே குழுக்​களில் இருக்​கிறீர்​களா, அவர்​கள் எந்த நாட்​டில் இருக்கிறார்கள் போன்ற விவரங்​கள் மற்​றும் பிளாக் மற்​றும் ரிப்போர்ட் செய்யும் வசதி உள்ளிட்ட தேவையற்ற தொடர்புகளைத் தடுப்​ப​தற்​கான தற்​போதைய அனைத்து நடவடிக்​கைகளும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்​கும் என்றும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

SCROLL FOR NEXT