இந்தியர்கள் அதிகமாக சென்ற, செல்லும் நாடுகளின் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது இந்தோனேசியாவின் பாலி தீவு. சென்னையில் இருந்து நேரடி விமானம் இல்லை. இரண்டு விமானங்கள் மாறிச் செல்வதால் நேரமும் அதிகம். ஆனால் இவற்றைத் தாண்டி பாலி-யில் கூட்டம் குவிக்கிறதென்றால் ஏதோ ஒரு கவர்ச்சி அங்கே இருப்பதாகத்தானே அர்த்தம்! அது உண்மைதான்.
கடவுள்களின் தேசம், கோயில்களின் உலகம் என்றெல்லாம் பாலி அறியப்பட்டாலும் அதை தாண்டி பச்சை பெயின்ட் அடித்துக் கொண்ட வயல்வெளிகள், இயற்கை குறையாத கடற்பரப்புகள், குமுறும் எரிமலைகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பாலியின் முதன்மையான அட்ராகக்ஷன் லிஸ்டில் வருவது, தானா லோட் (tanah lot) கோயில். இந்தப் புகழ்பெற்ற இந்து கோவிலுக்கு வழிபாட்டுக்கென வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் குறைவு.
ஆனால், கடலுக்கு நடுவே பெரிய பாறையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் மொபைல் போன் வைத்திருப்போர் எல்லோரும் கேமராமேனாக மாறி விடுவதை காண முடியும். ஆம்! இந்த கோயிலின் சூரிய அஸ்தமனம் நமக்குள் இருக்கும் அத்தனை ரசனையையும் ஒட்டுமொத்தமாக வெளிக்கொண்டு வருகிறது. தானா லோட் போலவே மிகவும் சிறப்பானது உலுவாத்து (uluwatu). இதுவும் கடற்கரை கோயில் என்றாலும் இங்கே எக்ஸ்ட்ராவாகப் புகழ் பெற்றிருக்கும் அலைசறுக்கு, கெசக் நடனம் போன்றவற்றில் சுற்றுலாப் பயணிகள் நிறையவே ஈர்க்கப்படுகிறார்கள்.
அலைகளின் அழகை பார்த்தபடி, பாறைகளின் மேலே அமைந்துள்ள இந்த இடமும், ஒரு இந்து கோயில். இங்கே சூரியன் மறையும் போது கோயிலின் பின்னணியில் நடத்தப்படும் ராமாயண கதை, நடனம் உங்களை வேறொரு உலகுக்கே அழைத்துச் செல்லும். இதையும் தாண்டி இங்கே நிகழும் அற்புதமான அலைச்சறுக்கிற்கென உலகெங்கும் இருந்து வரும் வீரர்களைக் காண முடிகிறது. பாலி-யின் மற்றொரு ஈர்ப்பு கிந்தாமணி (kintamani). இங்கிருந்து காணக்கிடைக்கும் மவுண்ட் பாத்துர் எரிமலை, மற்றும் அங்குள்ள ஏரி இவை இரண்டும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகு.
கிந்தாமணிக்கு செல்வோர் ஒரு சில இரவுகளாவது தங்குவது நல்லது. ஏனெனில் இயற்கை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இறைத்திருக்கும் கிந்தாமணியில் எரிமலை மற்றும் அருகில் உள்ள அருவிகள் கொஞ்சமும் மாறாத கிராமப்புற அழகு என இந்து, பாலி-யின் கலாச்சாரம் அனுபவிக்க நிறையவே கிடைக்கிறது. இந்தோனேஷியா சுற்றுலா செல்ல விழைவோர், பாலியோடு நீங்கள் யோக்கிய கர்த்தா (Yogyakarta) அல்லது ஜோக் ஜகர்த்தா என்று அழைக்கப்படும் இந்த இடத்தையும் தேர்வு செய்யலாம்.
ஆனால், யோக்கிய கர்த்தா பெரும்பாலும் வரலாற்றுச் சுவடுகளை விரும்புவோருக்கானது என சொல்லலாம். போராபுடூர் மற்றும் ப்ராம்பனன் கோயில்கள் (Prambanan Temple) யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில்கள் முழுமையான இந்து கோயில் வளாகமாகும்.
மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணுவுக்கான கோயிலான இது, இந்தோனேசியா கட்டிடக் கலையை காண ஒரு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். பழமை ஒருபுறம் மற்றும் இதன் பிரம்மாண்டம் ஒருபுறம் என்று மலைத்துப் போகச் செய்கிறது இந்த இடம். இந்து கலாச்சாரத்தின் அடையாளமான இந்த வளாகத்தை இந்தோனேசியா அரசு தொன்மை மாறாமல் அப்படியே பராமரித்து வருவது இதன் சிறப்பு.
யோக்யகர்த்தாவின் பிஸியான தெருக்கள், உங்களை மனம் கவரும் விதவிதமான உணவு வகைகள், குட்டி குட்டி தெருக்களின் ஷாப்பிங் என உங்கள் பட்ஜெட்டை பதம் பார்க்காதவை இங்கு நிறையவே உண்டு. இந்தோனேசியாவுக்கு சென்னையில் இருந்து நேரடி விமானம் இல்லை. இரண்டு இடங்கள் மாறி போக வேண்டும். அப்படி என்றால் செலவு நிறைய ஆகுமே என்று நினைக்காதீர்கள். இந்தோனேசியாவுக்கான பேக்கேஜ் டூர்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு நிறையவே கிடைக்கின்றன. - மலையப்பன் நாகலிங்கம்