ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ‘இலுயுஷின் ஐஎல்-96-300 பியூ’ (Ilyushin IL-96-300 PU) என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்படுத்தி வருகிறார்.
இந்த விமானம், ‘பறக்கும் அதிபர் மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது. இதில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் 13,000 கிலோ மீட்டர் வரை விமானம் தரையிறங்காமல் பறக்க முடியும். நடுவானிலேயே விமானத்துக்கு எரிபொருளை நிரப்ப முடியும்.
அதிபர் புதினின் விமானத்தில் மிகப்பெரிய கருத்தரங்கு கூடம், பல்வேறு அறைகள், சொகுசு படுக்கை அறை, தங்க முலாம் பூசப்பட்ட குளியல் அறை, மதுபான பார், உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ சிகிச்சை அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. எதிரிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக விமானத்தில் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த விமானத்தில் பறந்தபடியே அணுகுண்டு தாக்குதல் நடத்த அதிபர் புதினால் உத்தரவிட முடியும். இதற்காக விமானத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது.
தகவல் தொடர்புக்காக அதிநவீன செயற்கைக்கோள் தொலைபேசி வசதி செய்யப்பட்டு இருக்கிறது. தேவைப்பட்டால் எதிரிகளின் ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானத்தை மறைந்து போக செய்ய முடியும். இந்த விமானம் 55.35 மீட்டர் நீளம், 17.55 மீட்டர் உயரம் கொண்டது. இதன் எடை 250 டன் ஆகும். விமானத்தில் ஒரே நேரத்தில் 262 பேர் வரை பயணம் செய்ய முடியும்.
குறிப்பாக அதிபர் புதினின் பாதுகாவலர்கள், அதிபர் மாளிகை அதிகாரிகள், மூத்த மருத்துவர்கள் உட்பட சுமார் 100 பேர் விமானத்தில் பயணம் மேற்கொள்வார்கள். புதினின் விமானத்துக்கு பாதுகாப்புக்காக சுகோய் 35 போர் விமானங்கள் இருபுறமும் அணிவகுத்து செல்லும். ஒருவேளை புதின் செல்லும் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் ரஷ்யாவின் விமானப் படை தளங்கள் அல்லது நட்பு நாடுகளின் விமானப் படை தளங்களில் தரையிறக்கப்படும்.
ஒவ்வொரு பயணத்தின்போது இலுயுஷின் ஐஎல்-96-300 PU ரகத்தை சேர்ந்த மற்றொரு சொகுசு விமானமும் உடன் செல்லும். அந்த மாற்று விமானத்தில் அதிபர் புதின் பயணத்தை தொடர்வார்.
இந்திய சுற்றுப் பயணத்துக்காகவும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து இலுயுஷின் ஐஎல்-96-300 PU விமானத்தில் அதிபர் புதின் டெல்லிக்கு புறப்பட்டார். அப்போது உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் அவரது விமானம் செல்லும் பாதையை ரேடாரில் கண்காணித்தனர். அவரது விமானம் ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக இந்திய தலைநகர் டெல்லியை வந்தடைந்தது.