பொது

ஈரான் போரும் பதற்றமும்... நிலவரம் என்ன? - ஒரு பார்வை

செய்திப்பிரிவு

அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவங்கள் இணைந்து ஈரான் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கில் செயல்படும் 27 அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானில் ஞாயிற்றுகிழமை நிலவரப்படி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவரான 88 வயது அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்தத பின்னர், இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவோம் என்று ஈரான் ராணுவம் சபதம் ஏற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இராக், கத்தார், குவைத், ஜோர்டான், பஹ்ரைன், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் அமெரிக்காவின் 27 ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரக அரசு வட்டாரங்கள் கூறும்போது, “அபுதாபி, துபாய் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 137 ஏவுகணைகளை வீசியது. 209 ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு இந்தியர் உட்பட 58 பேர் படுகாயம் அடைந்தனர்” என்று தெரிவித்தன.

          

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள நட்சத்திர ஓட்டல், குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஓமன் நாட்டின் டக்ம் துறைமுகத்தின் மீது ஈரான் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் சில கட்டிடங்கள் சேதமடைந்தன. ஓமன் கடல் பகுதியில் சென்ற கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் மீது ஈரானின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இந்த கப்பலில் 15 இந்தியர்கள், 5 ஈரானியர் இருந்தனர். ஈரான் தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

குவைத்தை குறிவைத்தும் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 32 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானிய ஏவுகணைகள் விழுந்தன. கத்தார், ஜோர்டான் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீதும் ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் நகரை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகளை வீசியது. இதில் சில ஏவுகணைகள் அங்குள்ள குடியிருப்பில் விழுந்தன. இதில் 9 பேர் உயிரிழந்தனர். ஈரான் தாக்குதலால் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், பஹ்ரைன், ஓமனில் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை ஞாயிற்றுக்கிழமை பாரசீக வளைகுடாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘யுஎஸ்எஸ் லிங்கன்’ போர்க்கப்பல் மீது ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, “ஈரானில் தற்போதைய சர்வாதிகார ஆட்சியை ஈரான் மக்கள் அகற்ற வேண்டும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் தவற விடக்கூடாது. அடுத்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான ஈரான் அரசு அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும். இதை பயன்படுத்தி அரசு அலுவலகங்களை பொதுமக்கள் கைப்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் கூறும்போது, “அமெரிக்காவும் இஸ்ரேலும் சிவப்பு கோட்டை தாண்டிவிட்டன. அதற்கு இரு நாடுகளும் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சூழலில், ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய ராணுவ நிலவரத்தைக் கணக்கில் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் காமெனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்த ட்ரம்ப், இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப் பெரிய வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, “கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும்” என்று பதிலளித்த அவர், தற்போதைக்குத் தாக்குதல்கள் தொடரும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தான் தொடர்ந்து பேசி வருவதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று அஞ்சப்படுகிறது. இந்திய பெருங்கடலில் தி ஹார்முஸ் ஜலசந்தி அமைந்துள்ளது. இதன் வடக்கே ஈரான், தெற்கே ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் அமைந்துள்ளன. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 30 சதவீதமும், ஆசியாவை பொறுத்தவரை 80 சதவீதமும் இந்த ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது.

இந்நிலையில், ஈரான் ராணுவம் தி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை முழுமையாக மூடியுள்ளது. இதன்காரணமாக இருபுறமும் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. முக்கிய ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. போர்ப் பதற்றம் உச்சம் கண்டுள்ளதன் எதிரொலியாக, துபாய் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் 2 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT