பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட உத்தரப் பிரதேச பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்து, அவரைப் பிணையில் விடுவித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தின் பங்கர்மாவ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த குல்தீப் சிங் செங்கார் 2017-இல் தன்னிடம் வேலை கேட்டு வந்த 15 வயதுச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாகப் புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி நீதி கேட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் தற்கொலைக்கு முயன்றார். எனினும், அந்தச் சிறுமியின் தந்தை பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுச் சிறையிலேயே மரணமடைந்தார். ஓராண்டு கடந்த பிறகே இந்த வழக்கில் 2018-இல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட சிறுமி சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதியதில் சிறுமியோடு பயணித்த இரண்டு உறவினர்கள் பலியாகினர். சிறுமியும் அவருடைய வழக்கறிஞரும் பலத்த காயங்களோடு உயிர் தப்பினர். 2019-இல் நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உதவியை நாடினார் சிறுமி. அதைத் தொடர்ந்தே உன்னாவ் பாலியல் வழக்கு தேசிய அளவில் கவனத்தைப் பெற்றது.
இந்த வழக்கில் குல்தீப் சிங் செங்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2019 டிசம்பரில் டெல்லி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சிறுமியின் தந்தையின் மரணத்திலும் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என 2020இல் நிரூபிக்கப்பட்டது. இதற்கிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தை செங்கார் நாடினார். அவரது மனுவை ஏற்று அவருக்குப் பிணை வழங்கியதுடன், அவரது ஆயுள் தண்டனையையும் நிறுத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் 2025 நவம்பர் 23 அன்று தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூவர் அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்தது. சட்டமன்ற உறுப்பினரான செங்கார், இந்த போக்சோ வழக்கில் ‘அரசுப் பணியாளர்’ என்கிற வகைமைக்குள் வர மாட்டாரா எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டால், அதைக் கொடூரக் குற்றமாகக் கருதி அவர்களுக்கு 20 ஆண்டுகள் அல்லது இறக்கும் வரைக்கும் ஆயுள் தண்டனை விதிக்க வகையிருக்கும்போது, பழைய நடைமுறையின்படி ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையோடு செங்காரை விடுவிக்க முயன்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நீதிபதிகள் கேள்விக்கு உள்ளாக்கினர்.
போக்சோ குற்றங்களில் சில நெறிமுறைகளை மறுவரையறை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்பட்டால் அதைக் கடுமையான குற்றமாகக் கருதிக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வகை செய்ய வேண்டும் என்கிற கருத்தும் வரவேற்கத்தக்கதே.
அரசியல் அதிகார அச்சுறுத்தல்களுக்கு இடையிலும் தன் தந்தையின் கொடூர மரணத்தைத் தாண்டியும் நெடிய போராட்டத்தை நடத்திய சிறுமிக்கு நீதி கிடைப்பதை நீதிமன்றங்களும் அரசுகளும் உறுதிசெய்ய வேண்டும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.