திருத்தணி அருகே சில பதின்வயதுச் சிறுவர்கள், ஒடிசா மாநில இளைஞரைக் கொடூரமாகத் தாக்கி அதைக் காணொளியாகப் பதிவுசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினரில் பலர் சரியான வழிகாட்டல் இன்றித் தவறான பாதையில் பயணிக்கும் போக்கு கவலை அளிக்கிறது.
ஒடிசாவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளியான 34 வயது சுராஜ், டிசம்பர் 26 அன்று மின்சார ரயிலில் சென்னையிலிருந்து சென்றுகொண்டிருந்தார். நெமிலி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் வழியில் ஏறினர். அவர்கள் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் காணொளி பதிவிடுவதற்காக சுராஜின் கழுத்தில் அரிவாளை வைத்து அலைபேசியில் படம் பிடித்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சுராஜை அவர்கள் தாக்கினர்; மேலும், திருத்தணியில் ரயில் நின்றவுடன், அவரைத் தனிமையான இடத்துக்கு இழுத்துச் சென்று அரிவாளால் கொடூரமாகத் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.
தீவிரக் காயம் அடைந்த சுராஜ் குறித்து பகுதி மக்கள் திருத்தணி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த நிலையில், முதலில் திருத்தணி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் பின்னர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் அவர் சேர்க்கப்பட்டார். தாக்குதல் நடத்திய நால்வருமே போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே சிறுவர்களால் சுராஜ் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிப் பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. அந்தக் காணொளியையும் சம்பவ இடத்தின் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கொண்டு காவல் துறையினர் டிசம்பர் 28 அன்று நான்கு பேரையும் கைது செய்தனர். இளையோர் நீதிக்குழு முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களில் மூவர், செங்கல்பட்டில் உள்ள பாதுகாப்பு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். ஒருவருக்குப் பிணை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளாகப் பதின்வயதினரிடையே போதைப்பொருள்கள் அதிகளவில் ஊடுருவிவிட்டது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. பல அரசுப் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் இத்தகைய பழக்கங்களால் தங்களையும் இழப்புக்கு உள்ளாக்கி, கல்விச் சூழலையும் சிதைப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக முறையிட்டுவருகின்றனர்.
பெருநகரமான சென்னையைக் கடந்து, பிற மாவட்டங்களிலும் பதின்வயதைச் சேர்ந்தோர் போதையில் மக்களையும், சில சூழல்களில் காவலர்களையும்கூடத் தாக்கும் சம்பவங்கள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில், திருத்தணி தாக்குதல் இப்பிரச்சினையின் தீவிரத்தை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது.
இதற்கிடையே, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வந்த சுராஜ், உதவியாளர் இல்லாமல் அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், முழுமையான சிகிச்சையை தவிர்த்து சொந்த ஊருக்குப் போவதாகச் சொல்லி எழுதிக் கொடுத்துவிட்டு மருத்துவமனையில் இருந்து சுராஜ், கிளம்பியதாகச் சொல்லப்படுகிறது. சுராஜ், முழுமையாக சிகிச்சை பெறாமல் சென்றதில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தச் சூழலில்தான், தீவிரக் காயத்துடன் இருந்த ஒரு நோயாளியை தனியே ஆம்புலன்சில் அனுப்பி வைத்த போலீசாரின் அலட்சியம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. கொடூரமாகத் தாக்கிய சிறுவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை ஆய்வுக்குப் பிறகே சொல்ல முடியும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியது, மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதை என்னும் கொடிய பிடியில் இளையோர் சிக்கிச் சீரழிவது மட்டுமின்றி, சமூக அமைதியை சீர்குலைக்கும் வேலைகளிலும் படர்வது கவலைக்குரிய விஷயம். இதில் தீவிரக் கவனம் செலுத்தி, தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே, இளையோரை மீட்க முடியும். மக்களின் நம்பிக்கையையும் பெற முடியும் என்கிறது இந்து தமிழ் திசை தலையங்கம்.