மின்னல் என்பது மேகங்களுக்கு இடையே நிகழ்கின்ற அல்லது இரண்டு மேகங்களுக்கும் தரைக்கும் இடையே நிகழ்கின்ற உடனடி மின்னிறக்கம், அதாவது Electrical Discharge ஆகும். தற்போது மின்னல் தாக்குதல் அதிகரித்திருப்பதற்குக் காலநிலை மாற்றமே காரணம் என்கிறது மத்திய புவி அறிவியல் அமைச்சகம். வெப்பச்சலனம் அல்லது இடி, மின்னல் மேக உருவாக்கத்துக்குக் காலநிலை மாற்றம் காரணமாக உள்ளதாகவும், அதனால் காற்றில் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன் அதிகமாவதாகவும் கூறப்படுகிறது. தரையின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கிறபோது, காற்று இலகுவாக இருந்தால் அது மேலும் உயரும்.
அதிக வெப்பநிலையானது இடி மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
புவி வெப்பமாதலுக்கு அடுத்தபடியாக நகரமயமாக்கம், காடழிப்பு, நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு, அதாவது urban heat island effect, தூசிப்படலம் அதிகரிப்பு உள்ளிட்டவை மின்னல் தாக்குதலை அதிகப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களைக் காட்டிலும் நகரப்பகுதிகள் அதிக வெப்பமானதாக உள்ளன. கான்கிரீட் கட்டிடங்கள் அதிகமாக வெப்பத்தை தக்கவைத்துக்கொள்கின்றன. அதிகமான, செறிவுமிக்க தூசிப்படலத்தால் காற்று மாசு அதிகரித்து, அதன் விளைவாக மழைத்துளியின் அளவு குறைகிறது. இதனால் மேகத்திரளில் இருக்கும் பனிக்கட்டிகளின் எண்ணிக்கை அதிகமாகி, அவற்றுக்கு இடையேயான மின்கடத்தும் திறன் அதிகமாகிறது. இது, மின்னல் தாக்குதலுக்கான சாத்தியத்தையும் தீவிரத்தையும் அதிகப்படுத்துகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் ‘தாமினி’ செயலியானது 40 நிமிடங்களுக்கு முன்னதாக ‘மின்னல்’ எச்சரிக்கையை விடுக்கிறது. தமிழக அரசின் TNSMART இணையதளம், TN-ALERT செயலிகள் இது போன்ற எச்சரிக்கைகளை வழங்குகின்றன.
பனைமரங்கள் நடுவது, முன்னெச்சரிக்கை அமைப்புகளுடன் ஸ்மார்ட் கம்பங்களை அமைப்பது, அதிக அபாயம் உள்ள பகுதிகள் குறித்த வரைபடங்களை உருவாக்குவது உள்பட அறிவியல்பூர்வமான கண்காணிப்பும், தரவுத் துல்லியத்தன்மை அதிகரிப்பும் அவசியம். அதுபோலவே, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் கீழ்மட்ட அளவிலான செயல்படுத்துதலுக்கும் உள்ள இடைவெளியைக் குறைத்தாக வேண்டும். இவற்றோடு மின்னல் தடுப்பு கட்டமைப்பில் அதிக முதலீட்டை ஈர்த்தாக வேண்டிய கடமை அரசுகளுக்கு உள்ளது. காலநிலை மாற்றங்களைத் தூண்டுகிற மனிதச் செயல்பாடுகளை நிறுத்துவது மிக மிக முக்கியம்!