ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள சூழலில், ஈரான் போராட்டாத்தை முன்வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு அதிரடி நகர்வுகளை முன்னெடுத்துள்ளார். இது, இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால், அந்நாட்டின் மீது சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் ஈரானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. அத்துடன், பொருளாதார - அரசியல் ரீதியிலான காரணங்களால் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த டிசம்பர் 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரானில் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. அப்போது தெஹ்ரானின் முக்கிய வணிக சந்தையான கிரான்ட் பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன. ஜென்ஸீ இளைஞர்கள் தலைநகரில் திரண்டு மதத் தலைவர் காமேனி, அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வலியுறுத்தினர்.
கடந்த இரு வாரங்களில் அரசுக்கு எதிரான போராட்டம் ஈரான் முழுவதும் வியாபித்து பரவி உள்ளது. இளைஞர்கள், வணிகர்கள், ஜனநாயக ஆட்சியை விரும்பும் அமைப்புகள், குர்து, பலூச் இன மக்கள் அரசுக்கு எதிராக சாலை, தெருக்களில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து வருவதால் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் சர்வதேச செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈரான் முழுவதும் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவித்தார். ஈரான் இன்டர்நேஷனல் என்ற இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ஈரானில் கடந்த டிசம்பர் முதல் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதை அரசு தரப்பு மறைக்கிறது. ஊடகங்கள் முடக்கப்பட்டு உள்ளன. இணைய சேவை, தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பின்னணியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் “ஈரானிய தேசப்பற்றாளர்களே... தொடர்ந்து போராடுங்கள். அரசு கட்டமைப்புகளை கைப்பற்றுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகள் வந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, “ஈரான் அரசுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் வணிகத்துக்கு 25% வரி செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உக்ரைன் - ரஷ்யா இடையே போர் எனில், அதற்கு ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பு, ஈரானில் உள்நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டம் எனில், அதற்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி.
இப்படி உலகில் எங்கு எது நடந்தாலும் முந்திக் கொண்டு பொருளாதாரத் தடையை விதித்து, அதனால் தடை விதிக்கப்பட்ட நாட்டுக்கும் அதனுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் நாடுகளுக்கும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்துவது அமெரிக்காவுக்கு புதிது இல்லை என்றாலும், ட்ரம்ப் ஆட்சியில் அதன் வீச்சு சற்றே தூக்கலாக, அதுவும் துல்லியமாக சில நாடுகளைக் குறிவைத்தும் இருப்பதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அந்த வகையில் ஈரானுடன் வர்த்தகத் தொடர்பு கொண்டுள்ள நாடுகளுக்கு ட்ரம்ப் விதித்துள்ள இந்த 25 சதவீத வரியால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய நாடுகள் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளாக இருக்கும். ஈரானுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் டாப் 5 நாடுகளில் இவை உள்ளன. துருக்கி, ஐக்கிய அரபு அமீரகமும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவர் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அமெரிக்க இதழ்களில் செய்தி வெளியானது. ஆனால், படையெடுப்புக்கு முனோட்டமாக வரி விதிப்பைத் தொடங்கியுள்ளது அமெரிக்கா. அதுதான், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதான 25 சதவீத வரி விதிப்பு. ஈரான் - இந்தியா இடையே கடந்த 2024-25 காலக்கட்டத்தில், இந்திய மதிப்பில் 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் நடந்துள்ளது. இதில் இந்திய ஏற்றுமதி 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலானது; இறக்குமதி 3,700 கோடி ரூபாய் மதிப்பிலானது.
கடந்த 2019-க்குப் பின் ட்ரம்ப் ஈரான் மீது விதித்த பல்வேறு தடைகளின் காரணமாக இந்தியா அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொண்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இதனால், 2019-ல் இந்தியா - ஈரான் வர்த்தகம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அமெரிக்க தடைக்குப் பின்னர் அது 87 சதவீதத்தில் சரிந்து, 2024-ல் 19 ஆயிரம் கோடி ரூபாயாக வீழ்ந்துள்ளது. இப்படியான சூழலில் அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு ஈரான் - இந்தியா வர்த்தகத்தில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
ஈரானுக்கான இந்திய ஏற்றுமதியில் பிரதானமானவை பாஸ்மதி அரிசி, தேநீர், சர்க்கரை, மருந்துப் பொருட்கள், பழங்கள், தானியங்கள், இறைச்சிப் பொருட்கள் அடங்கும். இந்திய பாஸ்மதி அரிசியின் மிகப்பெரிய சந்தை ஈரான். இப்போதைய புதிய வரிகள் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியை பாதிக்கும். அதேபோல் மெத்தனால், பெட்ரோலியம் பிட்டுமன், திரவ ப்ரோபேன் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள், ஆப்பிள், பேரீச்சம் போன்ற பழங்கள் ஏற்றுமதியை பாதிக்கும்.
முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் வழங்கினார். இப்போது ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கையில், ட்ரம்ப் வரி விதிப்புகளின் இலக்கு என்பது போர் நிறுத்தம், அமைதி ஏற்படுத்துதல் என்பதையும் தாண்டி தனது ஈகோவுக்குக் கட்டுப்படாத நாடுகள், குறிப்பாக இந்தியாவுக்குமானது என்பது உறுதியாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.