பொது

FIFA WC 2026-ல் கெத்து அணிகள் எவை? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

செய்திப்பிரிவு

2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோவில் கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இதில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதில் தெளிவு கிடைக்கவில்லை. ஆனால், சில அணிகள் மற்ற அணிகளை விட சாம்பியன் பட்டத்துக்கான வலுவான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றன. அதில் முன்னணியில் இருக்கும் அணிகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

ஸ்பெயின்... 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக ஸ்பெயின் பார்க்கப்படுகிறது. அனுபவமும் இளமையும் கலந்த அணியாக இருக்கும் ஸ்பெயினில் லாமின் யமால், பெட்ரி மற்றும் ரோட்ரி போன்ற வீரர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். கால்பந்து நிபுணர்களும் புள்ளிவிவர கணிப்புகளும் ஸ்பெயினை முன்னணி அணியாகக் குறிப்பிடுகின்றன.

அடுத்து பிரான்ஸ்... உலகக் கால்பந்தின் மிக வலுவான அணிகளில் ஒன்றாக பிரான்ஸ் தொடர்கிறது. கிலியன் எம்பாப்பே தலைமையிலான இந்த அணி, தாக்குதலிலும் பாதுகாப்பிலும் அபார திறனை கொண்டுள்ளது. பிரான்ஸ் அணி உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக நிபுணர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்து பிரேசில்... புதிய பயிற்சியாளர் கார்லோ அன்சலோட்டியின் கீழ் பிரேசில் களமிறங்குகிறது. வினிசியஸ் ஜூனியர் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்களுடன், கோப்பையை வெல்லும் திறன் கொண்ட அணியாக பிரேசில் கருதப்படுகிறது. அடுத்து அர்ஜெண்டினா... நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா, தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையை வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது. லயோனல் மெஸ்ஸி மீண்டும் ஒருமுறை மாயாஜாலத்தை நிகழ்த்துவாரா என்பது உலக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அடுத்து போர்ச்சுகல்... கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அனுபவத்துடன், திறமையான இளம் வீரர்களின் கலவையால் போர்ச்சுகல் மிகவும் சமநிலையான அணியாகத் திகழ்கிறது. இந்த அணி கோப்பையை வெல்ல போராடக்கூடிய உண்மையான போட்டியாளராக பார்க்கப்படுகிறது. அடுத்து இங்கிலாந்து... அதிக திறமை கொண்ட வீரர்களுடன் வலுவான அணியாக இங்கிலாந்து களமிறங்குகிறது. கடந்த சில பெரிய தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்த அணி, 2026-ம் ஆண்டு தொடரிலும் சவால் தரக்கூடும்.

இந்த அணிகளுடன் ஜெர்மனி, பெல்ஜியம், மொராக்கோ, நெதர்லாந்து, குரோஷியா ஆகிய அணிகள் அரையிறுதி வரை முன்னேறுவதற்கும், பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதற்கும் முழுத் திறன் கொண்டவை.

SCROLL FOR NEXT