கல்விக் கடன் என்பது ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் மிக முக்கியமான சட்டப்பூர்வ ஏற்பாடாகும். இருப்பினும், நடைமுறையில் வங்கிகள் பல்வேறு காரணங்களைக் கூறி கல்விக் கடன் வழங்க மறுப்பது தொடர்கதையாக உள்ளது. இத்தகைய சூழலில், இந்திய நீதிமன்றங்கள் மாணவர்களின் பக்கம் நின்று, அவர்களின் சட்டரீதியான உரிமைகளை நிலைநாட்டும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளைக் கூறியுள்ளன.
இந்தியாவில் உயர் கல்விக்கான செலவு விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், தகுதியுள்ள மாணவர்களுக்குக் கடன் வழங்குவது வங்கிகளின் சமூகக் கடமையாகும். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கல்விக் கடன் என்பது ‘முன்னுரிமைத் துறை கடன்’ பிரிவின் கீழ் வருகிறது. அதாவது, வங்கிகள் தங்களின் மொத்தக் கடனில் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தகுதியான மாணவர்களுக்கு வழங்கியே ஆக வேண்டும்.
எனினும், ஏதேனும் காரணங்களைக் கூறி வங்கிகளால் கல்விக் கடன் மறுக்கப்படும் சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதுபோன்ற தருணங்களில் நீதிமன்றங்களை நாடும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் உட்பட நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
பல நேரங்களில் மாணவர்களின் பெற்றோருடைய சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாகக் கூறி வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றன. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பில், ‘கல்விக் கடன் என்பது மாணவரின் எதிர்கால வருமான ஈட்டும் திறனை அடிப்படையாகக் கொண்டது. பெற்றோரின் கடன் வரலாறு அல்லது சிபில் ஸ்கோரைக் காரணம் காட்டி மாணவர்களின் கல்விக்கனவை வங்கிகள் சிதைக்கக் கூடாது’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் Management Quota மூலம் கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருந்தாலும் அல்லது குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் கடன் வழங்க மறுக்க முடியாது என நீதிமன்றங்கள் கூறியுள்ளன. ‘கல்வி நிறுவனங்கள் மாணவரைச் சேர்த்துக் கொண்ட பிறகு, அந்த மாணவர் கடனுக்குத் தகுதியற்றவர் என வங்கிகள் தீர்மானிக்க முடியாது’ என்பதே நீதிமன்றங்களின் நிலைப்பாடு.
பெற்றோர்கள் ஏற்கெனவே வங்கியில் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால், அதைக் காரணம் காட்டி பிள்ளைகளுக்குக் கல்விக் கடன் மறுக்கப்படக் கூடாது. கடன் என்பது தனிநபர் சார்ந்தது, குடும்பப் பின்னணி சார்ந்தது அல்ல என்று பல தீர்ப்புகள் வலியுறுத்துகின்றன.
இவ்வாறு பல தீர்ப்புகள் மாணவர்களுக்கு ஆதரவாக வந்திருக்கும் நிலையில், கல்விக் கடன் பெறுவதில் மாணவர்களுக்கு உள்ள உரிமைகள் குறித்து இங்கு போதிய விழிப்புணர்வு இல்லை. வங்கிக் கிளைகளுக்குச் செல்லும்போது மாணவர்கள் தங்களின் உரிமைகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
இந்திய வங்கிகள் சங்கத்தின் விதிகளின்படி, 4 லட்சம் ரூபாய் வரையிலான கல்விக் கடனுக்கு எந்தவிதமான பிணையமும் அல்லது மூன்றாம் நபர் ஜாமீனும் தேவையில்லை. படிப்பு முடிந்து ஓராண்டு வரை அல்லது வேலை கிடைத்த 6 மாதங்கள் வரை கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
படிப்புச் செலவில் ஒரு பகுதியை மட்டும் வழங்குவதாக வங்கி கூற முடியாது. கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கான செலவு அனைத்தையும் உள்ளடக்கியதாகவே கடன் இருக்க வேண்டும். அதேபோல், ஒரு மாணவரின் கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தால், அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும். வாய்மொழியாக மறுப்பது சட்டப்படி செல்லாது.
ஒருவேளை, வங்கிகள் கடன் வழங்க மறுக்கும் பட்சத்தில், ஏன் கடன் மறுக்கப்படுகிறது என்பது பற்றி வங்கியின் மேலாளர் முறையான பதில் அளிக்கவில்லை எனில், வங்கியின் குறைதீர்ப்பாளரிடம் இணையதளம் வாயிலாகப் புகார் அளிக்கலாம். சரியான காரணங்கள் இன்றி, கல்விக் கடன் மறுக்கப்படும் போது, உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்து நிவாரணம் பெற முடியும்.
கல்வி என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கான அடிப்படை. வறுமையின் காரணமாக ஒரு மாணவரின் கல்வி தடைபட்டுவிடக் கூடாது என்பதே இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் நோக்கமாகும். மாணவர்கள் விழிப்புணர்வுடன் தங்களின் உரிமைகளை நிலைநாட்டும்போது, நீதிமன்றத் தீர்ப்புகள் அவர்களுக்குக் கேடயமாக விளங்கும்.