பொது

தமிழில் 85,000+ ஆசிரியர்கள் தோல்வி - காரணம் என்ன?

Rathish.R

கட்டாயத் தமிழ்ப் பாடத்தில் 20 மதிப்பெண்களை எடுத்துத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிஜி-டிஆர்பி தேர்வில் தகுதி பெற முடியும். இந்நிலையில், 2 லட்சத்து 36 ஆயிரம் பேர் எழுதிய முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வின் முடிவுகளில், கட்டாயத் தமிழ்ப் பாடத் தேர்வில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான தேர்வர்கள் தோல்வியடைந்திருக்கின்றனர். இவ்வளவுக்கும் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப்புத்தகங்களில் இருந்துதான் தமிழ்ப் பாடத் தேர்வில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அப்படியிருந்தும், ஆயிரக்கணக்கானோர் தோல்வி அடைந்திருப்பது, இரண்டு விதமான சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறது.

முதலாவதாக, தேர்வர்களில் பெரும்பாலோர் ஆங்கில வழித் தனியார் பள்ளி ஆசிரியர்கள். இவர்களில் அதிகம் பேர் முதுநிலை, கல்வியியல் பட்டங்களுடன் எம்.பில். பிஎச்டி வரை படித்தவர்களாகக்கூட இருப்பார்கள். அவர்கள் தமிழர்களாக இருப்பினும் இந்தத் தேர்வுக்குத் தயாராகும்போது தங்கள் பாடப்பிரிவுக்கு மெனக்கெடும் அளவுக்குத் தமிழ்ப் பாடத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.

அலட்சியம்தான் இதற்கு முதன்மைக் காரணம் எனக் கருதப்படுகிறது. மறுபுறம், நடப்பாண்டில் 13 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் முடிவுகளில் தமிழ்ப் பாடத்தில் தோல்வி எனும் பிரச்சினை எழவில்லை. இத்தனைக்கும் பிஜி-டிஆர்பி தேர்வைக் காட்டிலும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4-இல் தமிழ் மொழி சார்ந்து கடினமான கேள்விகள் கேட்கப்பட்டன. ஆக, தேர்வுகள் நடத்தப்படும் விதத்தில் வேறுபாடு இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பிஜி-டிஆர்பி தேர்வு மூன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக நடத்தப்படுவதால் தேர்வர்களுக்கு நடைமுறை சார்ந்த சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

முதன்மைப் பாடம் தொடர்பான கேள்விகளை மூன்றேகால் மணிநேரம் எழுதிவிட்டுக் கடைசி 15 நிமிடங்களில் தமிழ்க் கேள்விகளை எழுத நேரம் போதாமல் விட்டுவிடும் நிலையைப் பலர் எதிர்கொள்கின்றனர். எப்படிப் பார்த்தாலும், தாய்மொழியில் தோல்வி அடைவது இயல்பானதல்ல. இந்தப் பிரச்சினைகள் களையப்பட வேண்டும். பிஜி-டிஆர்பிக்கான கட்டாயத் தமிழ்ப் பாடத் தகுதித்தேர்வைத் தனித் தேர்வாக நடத்துவதை அரசு பரிசீலிக்கலாம்.

SCROLL FOR NEXT