மதுரை ரேஸ்கோர்ஸ் எம்ஜிஆர் விளையாட்டரங்க வளாகத்திலுள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் 14-வது ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் தொடங்கியது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி அணி.
இப்போட்டிகளை காண் பதற்கு பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்து டிக்கெட் பெற்ற 1,500 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் தற்காலிக பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு செய்யாத பார்வையாளர்கள் 2,000 பேர் காணவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் விளையாட்டரங்க மைதான வளாகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்பு வளையத்தில் இருந்தது. மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9 மணிக்கு ஜெர்மனி - தென்ஆப்பிரிக்கா அணிகளும், காலை 11.15 மணி யளவில் கனடா - அயர்லாந்து அணிகளும் மோதின. பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்பெயின் - எகிப்து அணிகளும், பிற்பகல் 3.45 மணிக்கு பெல்ஜியம் - நமீபியா அணிகளும் மோதுகின்றன.
ஜெர்மனி - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஜெர்மனி அணி 4 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது