கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் பிரசிடென்ட் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் பிடிவி - சுய் வடக்கு காஸ் அணிகள் மோதின. 4 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பிடிவி அணி 166 ரன்களும், சுய் வடக்கு காஸ் அணி 238 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் பிடிவி அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
40 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சுய் வடக்கு காஸ் அணி 19.4 ஓவர்களில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சைஃபுல்லா பங்காஷ் 14 ரன்கள் சேர்த்தார். பிடிவி அணி தரப்பில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான அலி உஸ்மான் 9 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளரான அமத் பட் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிடிவி அணி முதல்தர கிரிக்கெட் போட்டியில் 232 வருட சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் 1794-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் எம்சிசி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 41 ரன்கள் இலக்கை கொடுத்து ஓல்டுஃபீல்டு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் முதல்தர கிரிக்கெட்டில் குறைந்த இலக்கை கொடுத்து வெற்றி கண்ட அணி என்ற சாதனையை ஓல்டுஃபீல்டு அணி படைத்திருந்தது. இந்த சாதனையை தற்போது 232 வருடங்களுக்கு பின்னர் பிடிவி அணி முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
சுய் வடக்கு காஸ் அணி ஷான் மசூத் தலைமையில் களமிறங்கியது. ஷான் மசூத், பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ளார்.