Kumbakonam Festival album
மாசி மகப் பெருவிழாவையொட்டி கும்பகோணம் மகாமகக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம்.நிகழாண்டு இவ்விழாவையொட்டி, கும்பகோணம் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் கடந்த பிப்.15-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து காலை, மாலை சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தன.மேலும், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா ஏக தின உற்சவமாக நடைபெற்றது. மாசிமக தினத்தையொட்டி அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள், குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, குளத்தில் புனித நீராடினர்.தொடர்ந்து, நான்கு கரைகளிலும் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர்.தொடர்ந்து அந்தந்த கோயில் அஸ்திரதேவருக்கு 21 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 12.30 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, நான்கு கரைகளிலும், குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் குடமுழுக்குக்கான பாலாலயமும், கம்பட்ட விஸ்வநாதர் கோயிலில் கொடி மரம் திருப்பணிக்கான பாலாலயமும் செய்யப்பட்டுள்ளதால், இரு கோயில்களிலும் நிகழாண்டு மாசி மக விழா நடைபெறவில்லை.