தவெக தலைவர் விஜய் திருச்சியில் சனிக்கிழமை (செப்.12) சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இதற்காக எம்ஜிஆர், அண்ணா மற்றும் தவெக கொள்கை தலைவர்கள் படங்கள் இடம்பெற்ற விஜய்யின் பிரச்சார பேருந்து சென்னையில் இருந்து திருச்சி கொண்டு செல்லப்பட்டது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சனிக்கிழமை திருச்சியில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களும் சனிக்கிழமை தோறும் சுற்றுப்பயணம் செல்லும் விஜய், டிச.20-ம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையில் நிறைவு செய்கிறார். மொத்தம் 15 நாட்கள் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சுற்றுப் பயணத்துக்கான இலச்சினையை தவெக வெளியிட்டுள்ளது. அந்த இலச்சினையில், விஜய் மற்றும் கொள்கைத் தலைவர்களின் படத்துடன் ‘உங்க விஜய் நா வரேன்’, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது 1967, 1977, 2026’, ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற வாசகங்களும், உறுப்பினர் சேர்க்கைக்கான கியூ.ஆர் குறியீடும் இடம்பெற்றுள்ளது.
மேலும், சுற்றுப் பயணத்துக்காக நவீன வசதிகளுடன் தயார் செய்யப்பட்ட பேருந்தை, கட்சி கொடி நிறத்தில் முழுவதுமாக மாற்றி, அதில் விஜய் மற்றும் கொள்கை தலைவர்களின் புகைப்படமும், இலச்சினையில் இருப்பது போன்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
அண்ணா, எம்ஜிஆருக்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பேருந்து, விஜய்யின் பிரச்சாரத்துக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருவோர், விஜய்யின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் எனவும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என கட்சி தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பட்டாசு வெடிப்பது தவிர்க்க வேண்டும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது, சட்ட ஒழுங்கை பாதுகாக்க உதவ வேண்டும், பேனர்கள், விளம்பர பலகைகள் வைப்பது தவிர்க்க வேண்டும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது எனவும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.
தவெக தலைவர் விஜய் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தவெக மக்களுக்காக ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நா வரேன்’ என்கிற நமது பயணம் தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.
13-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, ‘மக்களிடம் செல்’ என்ற அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வருகிறேன்’ என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். “தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது” என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.