நிகழ்வுகள்

Odisha Train Accident | ரத்த தானம் செய்ய வரிசைகட்டிய இளைஞர்கள் - பிரதமர் மோடி பாராட்டு

Author : செய்திப்பிரிவு
ஒடிசாவின் பாலசோர் நகருக்கு அருகே உள்ள பஹனஹா பஜார் ரயில் நிலையப் பகுதியில் நேற்று மாலை 7 மணி அளவில் ரயில் விபத்து நேரிட்டது. 3 ரயில்கள் மோதிக் கொண்ட கோர விபத்தில் இன்று (ஜூன் 3) நண்பகல் 2 மணி நிலவரப்படி 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 747 பேர் காயமடைந்திருப்பதாகவும், இவர்களில் 56 பேர் பலத்த காயமடைந்திருப்பதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டாக் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரத்ததானம் கொடுத்துள்ளதாக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஜெயந்த் பாண்டா தெரிவித்துள்ளார். “ரத்த தானம் செய்ய இளைஞர்கள் மிகப் பெரிய ஆர்வத்தைக் காட்டினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்திருக்கிறார்கள். இதுவரை 500 யூனிட்க்கும் அதிகமாக ரத்தம் பெறப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பிறகு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
இதையடுத்து பேசிய பிரதமர், “ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது .
இந்தத் துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்ததை அவர் பாராட்டினார். காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டிய பிரதமர், “மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது” என்றார்.
உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க வரிசையில் காத்திருந்த இளைஞர்கள்.
SCROLL FOR NEXT