சினிமா

ராஜாவின் நட்பு முதல் கமலுக்கு டப்பிங் வரை: எஸ்பிபி பற்றிய 10 சுவாரஸ்யங்கள்

Author : செய்திப்பிரிவு
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகராக விளங்கிய எஸ்பிபிக்கு பொறியாளர் ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. ஆனால் கடுமையான டைஃபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் எஸ்பிபியால் படிப்பை தொடரமுடியவில்லை.
16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார் எஸ்பிபி. இது ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது. அதே போல எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடிய ஒரே பாடகரும் எஸ்பிபி மட்டுமே.
எஸ்பிபிக்கு மிகவும் பிடித்த பாடகர் முஹம்மது ரஃபி. பல்வேறு தருணங்களில் ரஃபியின் குரலை குறிப்பிட்டு சிலாகித்துள்ளார். ரஃபியின் பாடல்களை கேட்டுக் கட்டுப்படுத்த முடியாமல் எஸ்பிபி அழுததை பார்த்த அவரது மனைவி, ரஃபி பாடல்களை கேட்க தடை விதித்ததாக எஸ்பிபியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டில் கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக எஸ்பிபி 12 மணி நேரத்தில் 21 பாடல்களை பாடிக் கொடுத்துள்ளார்.
6 தேசிய விருதுகள், 6 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு பிலிம்பேர் விருது மற்றும் ஏராளமான நந்தி விருதுகள் எஸ்பிபிக்கு வென்றுள்ளார். இவை தவிர நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷண் விருது அவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாடல்கள் தாண்டி ரஜினி, கமல் உள்ளிட்ட பலருக்கும் எஸ்பிபி டப்பிங் கொடுத்துள்ளார். 1976ஆம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ‘மன்மதலீலை’ படத்தில் தற்செயலாக கமலுக்கு எஸ்பிபி டப்பிங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவே, அதன்பிறகு வெளியான கமலின் பெரும்பாலான படங்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசினார் எஸ்பிபி.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் 72 படங்களில் நடித்துள்ளார் எஸ்பிபி. இத்தனை படங்களில் நடித்த ஒரே இந்தியப் பாடகர் அவர் மட்டுமே. எஸ்பிபியின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் அதிக ஞானம் கொண்டவர் எஸ்பிபி.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் 46 படங்களுக்கு எஸ்பிபி இசையமைத்துள்ளார்.
இந்தியில் நடிகர் சல்மான் கானின் ஆரம்பகால படங்களில் எஸ்பிபி ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். ’மெயின் பியார் கியா’, ‘ஹம் ஆப்கே ஹெயின் கோன்’ உள்ளிட்ட படங்களின் பாடல்கள் பயங்கர ஹிட்டாகின.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எஸ்பிபி தலைமை தாங்கிய ஒரு லைட் மியூசிக் குழுவில் இளையராஜா (கிடார் மற்றும் ஆர்மோனியம்), பாஸ்கர் (தாளம்), கங்கை அமரன் (கிடார்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இளையராஜா, கங்கை அமரன் உடனான எஸ்பிபியின் நட்பு அவரது மரணம் வரை தொடர்ந்தது.
SCROLL FOR NEXT