சினிமா

மோகன்லால் பிறந்தநாள் | அறியப்படாத 10 தகவல்கள்

Author : செய்திப்பிரிவு
மலையாள திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன்லால். ரசிகர்களால் ‘லாலேட்டன்’ என்று செல்லமாக அழைக்கப்படும் மோகன்லால் இன்று (மே 21) தனது 63வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத 10 தகவல்களை இங்கே பார்க்கலாம்.
1) 1980ல் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார் மோகன்லால், 82 மற்றும் 88க்கு இடையே ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒரு மோகன்லால் திரைப்படம் வெளியானது. 1986ஆம் ஆண்டில் மட்டும் மோகன்லால் நடித்த 35 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. 80 முதல் 90 வரை சுமார் 170 படங்களில் நடித்துள்ளார்.
2) மோகன்லால் குறித்து பலருக்கும் தெரியாத ஒரு தகவல் அவர் ஒரு மல்யுத்த வீரர் என்பது. 1977-78ல் மோகன்லால் கேரளாவில் மல்யுத்த சாம்பியன் பட்டம் வென்றவர். டெல்லியில் நடக்கவிருந்த தேசிய மல்யுத்த சாம்பியன் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஃபாசில் இயக்கிய 'மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்' படத்தின் ஆடிஷனுக்கு சென்றதால் அந்த போட்டியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுதான் மோகன்லாலின் முதல் படம்.
3) மல்யுத்தம் தவிர்த்து டேக்வாண்டோவிலும் ஆர்வம் கொண்டவர் மோகன்லால். 2012ஆம் ஆண்டு தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள உலக டேக்வாண்டோ மையத்தின் தலைமையகம், மோகன்லாலுக்கு டேக்வாண்டோவில் கவுரவ பிளாக் பெல்ட் வழங்கியது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் மிசோரம் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லாவுக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் முதல் தென்னிந்திய நடிகர் மற்றும் மூன்றாவது இந்தியர் மோகன்லால் ஆவார்.
4) 2008ஆம் ஆண்டு மோகன்லால் எஸ்கேப் ஆர்டிஸ்ட் எனப்படும் தப்பித்தல் கலை நிபுணராக பயிற்சி மேற்கொண்டார். அவருக்கு பயிற்சியளித்தவர் பிரபல மேஜிக் கலை நிபுணர் கோபிநாத் முத்துகட். கேரள காவல்துறை சார்பாக திருவனந்தபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் ‘பர்னிங் இல்யூஷன்’ என்ற ஸ்டண்ட் ஒன்றை நிகழ்த்த மோகன்லால் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்று அவரது ரசிகர்கள் விமர்சித்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
5) 'மஞ்சில் விரிஞ்ஞ பூக்கள்' படத்துக்கு முன்பே 1978ஆம் ஆண்டு 'திரனோட்டம்' என்ற படத்தில் மோகன்லால் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். ஆனால் அப்படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு இப்படம் மலையாள சேனல் ஒன்றில் நேரடியாக வெளியானது.
6) நடிப்பு தவிர்த்து இசையிலும் அதீத ஆர்வம் கொண்டவர் மோகன்லால். 2014ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ரத்தீஷ் வேகாவுடன் இணைந்து ‘லாலிசம் - தி லால் எஃபெக்ட்’ என்ற பெயரில் ஒரு இசைக்குழுவை மோகன்லால் தொடங்கினார். இந்த இசைக்குழு 2015ஆம் ஆண்டு இந்திய நேஷனல் கேம்ஸ் போட்டியின் தொடக்க விழாவில் வாசித்தது.
7) மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார்களாக திகழும் மோகன்லால் மற்றும் மம்மூட்டி இருவரும் சினிமாவைத் தாண்டி தனிப்பட்ட வாழ்விலும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சேர்ந்து இதுவரை 55 படங்களில் நடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன என்பது கூடுதல் தகவல்.
8) நான்கு தயாரிப்பு நிறுவனங்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் மோகன்லால் மட்டுமே. கேசினா பிலிம்ஸ், சியர் பிலிம்ஸ், பிரணவம் ஆர்ட்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஆஷிர்வாத் சினிமாஸ் ஆகிய நான்கு பேனர்களின் கீழ் திரைப்படங்களை மோகன்லால் தயாரித்து வருகிறார்.
9) மலையாளத்திலிருந்து ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட முதல் படம் மோகன்லால் நடித்ததுதான்.1997ஆம் ஆண்டு ராஜீவ் அன்ச்சல் இயக்கத்தில் வெளியான ‘குரு’ படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை.
10) இந்திய டெரிடோரியல் ராணுவத்தால் ‘லெப்டினன்ட் கர்னல்’ என்ற கவுரவ பதவி வழங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் மோகன்லால் ஆவார்.
SCROLL FOR NEXT