சினிமா

லோகேஷ் கனகராஜ் முதல் எஸ்ஏசி பேச்சு வரை - ‘கருமேகங்கள் கலைகின்றன’ நிகழ்வு ஹைலைட்ஸ்

Author : செய்திப்பிரிவு
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “ஆரம்பத்தில் பெரிய இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் இயக்க முன்வரவில்லை. அதுவும், ஒருவகையில் நல்லதுதான். அவர் என் கையில் வந்ததால்தான் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அவர் மாறினார்” என்று பேசினார்.
கவுதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “இந்தப் படத்தில் நிஜமாகவே அழுது நடித்திருக்கிறேன். பாரதிராஜாவுக்கு மகனாக நடித்திருக்கிறேன். இதில் ஒரு காட்சியில் பாரதிராஜா என்னை அடிக்க வேண்டும். முதலில் தயங்கினார், பின்பு அடித்துவிட்டார். எப்போதோ வாங்க வேண்டியதை இப்போது வாங்கிவிட்டேன் என்று நினைத்துக் கொண்டேன்” என்றார்.
அதிதி பாலன் பேசுகையில், “தங்கர் பச்சான் அலுவலகத்திற்கு அழைத்து கதை கூறினார். எனக்கு பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனாலும், மற்றவர்கள் அவர் மிகவும் கோபப்படக் கூடியவர் என்று கூற கேள்விப்பட்டிருந்தேன். ஆகையால், சிறிது பயத்துடனே தான் சென்றேன். ஆனால், அவர் என்னை திட்டவில்லை, அதிகமாக பாராட்டியது என்னைத்தான்” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபுவிடம், “16 வயதினிலே' படத்தில், சப்பாணி, பரட்டை, டாக்டர் இந்த மூன்று கேரக்டரில் நீங்கள் நடித்தால் எந்த கேரக்டரில் நடிப்பீர்கள்?” என கேட்கப்பட்டது. அதற்கு, “டாக்டர் கேரக்டர்.. மயில் வாழ்க்கையை ஏமாத்திட்டு போய்விட்டார். அது வேண்டாம். எனக்கு ரஜினி நடித்த 'பரட்டை' கதாபாத்திரத்தில் தான் நான் நடிக்க விரும்புவேன்” என்றார்.
தங்கர் பச்சான் பேசுகையில், “நான் எடுத்த படத்தை பாராட்டுகிறார்கள், கொண்டாடுகிறார்கள். பள்ளிக்கூடம் படத்தைப் பார்த்து இன்று பல பள்ளிகள் புதுபிக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். ஆனால், பாக்ஸ் ஆபிஸில் என்ன வந்தது. அப்போது யார் குற்றவாளிகள்?. ‘கருமேகங்கள் கலைகின்றன’ அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்றார்.
லோகேஷ் கனகராஜ் பேசுகையில், “இந்த விழாவிற்கு தங்கர் பச்சான் அழைத்தார், என்னால் மறுக்க முடியவில்லை. ஆகையால், லியோ படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே வந்துவிட்டேன்” என்றார். இயக்குநர் தங்கர் பச்சான் அவருடைய மண்ணில் விளைந்த முந்திரி பருப்பு மற்றும் பலாப்பழம் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு கொடுத்தார்.
SCROLL FOR NEXT