தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தனது முதல் பிரச்சாரப் பயணத்தை திருச்சியில் சனிக்கிழமை (செப்.13) தொடங்கினார்.
படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த அவரை வரவேற்க, விமான நிலையம் முதல் காந்தி மார்க்கெட் மரக்கடை வரை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விஜய் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவதற்கே சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது.
காலை 10:35 மணியளவில் மரக்கடை பகுதியில் விஜய்க்குப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதிக்குச் செல்வதற்கே சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலானது.
தவெக தொண்டர்கள் நடந்து சென்று பிரச்சார வாகனத்தைப் பின்தொடர்ந்த நிலையில், அவரது வாகனம் மெதுவாக நகர்ந்து வந்து, பிரச்சார மேடையை அடைந்தது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தவெக தலைவர் விஜய் பிற்பகல் 3 மணிக்கு பேச ஆரம்பித்து 3.18 மணிக்கு முடித்தார்.
“அந்தக் காலத்தில் போருக்கு போகும் முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வ கோயிலுக்கு போய் சாமியை கும்பிட்டுதான் போவாங்க. அந்த மாதிரி தேர்தலுக்கு போகிறதுக்கு முன்னாடி நமது மக்களை பார்த்துட்டு போகலாம்னு வந்திருக்கேன்” என்று ஆரம்பித்தார் விஜய்.
“ஒரு சில மண்ணை தொட்டால் ரொம்ப நல்லது. ஒரு சில நல்ல காரியங்களை இந்த இடத்தில் இருந்து தொடங்கினால் நல்லது என்று பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா?
அதுமாதிரி திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையா அமையும். அதற்கு உதாரணமா அண்ணா 1956-ல் தேர்தலில் நிற்கலாம் என்று நினைத்தது திருச்சியில்தான். எம்ஜிஆர் 1974-ல் முதல் மாநாடு நடத்தியது திருச்சிதான்” என்றார் விஜய்.
“திருச்சிக்கு நிறைய வரலாறு இருக்கிறது. பெரியார் வாழ்ந்த இடம். மலைக்கோட்டை இருக்கும் இடம். மதசார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் போன இடம். கொள்கை உள்ள மண் இது. அது மட்டுமில்லாமல், உங்களை பார்க்கும்போது மனசுக்குள் ஒரு பரவசம், ஒரு எமோஷன்” என்றார்.
“2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் எத்தனை விஷயங்களை நிறைவேற்றியிருக்காங்க?”
“டீசல் விலை ரூ.3 குறைப்பு, மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணக்கீடு, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, அரசு வேலையில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு, பழைய ஓய்வூதிய திட்டம், 2 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்புவது. இவை எல்லாம் என்ன ஆனது?”
“நம்ம கேள்வி கேட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். திமுகவினரிடம் இருந்து எந்தப் பதிலும் வரப்போவதில்லை.”
“திருச்சி மக்களுடைய சத்தம் கேட்கிறதா முதல்வர் அவர்களே?”
“திமுக-வைச் சேர்ந்தவருக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.”
“பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்துவிட்டு ‘ஓசி... ஓசி..’ என்று சொல்லிக் காட்டுகிறார்கள்.”
“அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 தருவதில்லை. ஆனால், கொடுத்த சிலருக்கும் சொல்லிக் காட்டுகிறார்கள்.”
“கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை தவெக செய்துகொடுக்கும். பெண்கள் பாதுகாப்பிலும் சட்டப் பிரச்னைகளிலும் சமரசம் கிடையாது. நடைமுறைக்கு எது சாத்தியமோ அதையே நாங்கள் சொல்வோம். வெற்றி நிச்சயம்” என்று விஜய் பேசினார்.
திருச்சியில் பிரச்சாரம் துவங்கிய விஜய் மைக்கில் பேசியது 3 நிமிடங்கள் வரை தான் முழுமையாக அங்கு குழுமி இருந்தவர்களுக்கு கேட்டது. அதன்பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அவர் பேசியது யாருக்கும் சரிவர கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயின் வருகையால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக திருச்சி விமான நிலையத்துக்குள் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பயணிகள் உள்ளேயும், வெளியேவும் செல்ல முடியாமல் தவித்தனர்.
திருச்சிக்கு அடிக்கடி விஐபிக்கள், விவிஐபிக்கள் வரும் மாநகரம் என்பதால் எப்போதும் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும். ஆனால், இன்றைய விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் காவல் துறை பாதுகாப்பு என்பது பெயரளவில்தான் இருந்தது.
வழக்கமாக, ஆளுநர், முதல்வர், பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் வரும்போது திருச்சி மாநகர காவல்துறை சார்பில் 1000-க்கும் குறையாமல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஆனால், இன்றைய பிரச்சாரத்தின்போது வெறும் 600 போலீஸார் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், கூட்டத்தை கட்டுப்படுத்தவோ, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவோ ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இதனால் இன்று காலையில் இருந்து மாலை திருச்சி மாநகரத்தின் பிரதான பகுதிகளில் பொது போக்குவரத்துக்கு தடையும், போக்குவரத்து நெரிசல் சிக்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியினர்.
விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் காலை 8 மணி முதலே தவெக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இணையாக இளம்பெண்கள், இளைஞர்கள், குடும்ப பெண்மணிகள் மரக்கடையில் குவிந்தனர். உற்சாக மிகுதியில் ஆட்டம், பாட்டம், கூக்குரல் எழுப்பினர்.
5 மணி நேரம் வரையிலான காத்திருப்பு, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத காரணத்தினால் பலர் மயக்கமுற்றனர்.
திருச்சி விமான நிலையம் துவங்கி, மரக்கடை பிரச்சார செய்யும் இடம் வரையிலும் விஜய் பார்க்க வந்த தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் நெரிசலில் சிக்கி தொலைத்த 1,000-க்கும் மேற்பட்ட காலணிகள் சிதறிக் கிடந்தன.
விஜய்யை காண வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பெண்கள், இளம்பெண்கள் குறிப்பாக பள்ளி சிறுவர், சிறுமிகள், கல்லூரி மாணவ, மாணவிகளை அதிகளவில் காண முடிந்தது. அதேபோல நடுத்தர வயது பெண்களும் கூட்ட நெரிசலால் ஏற்படும் ஆபத்தை உணராமல் தங்கள் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் அழைத்து வந்தனர்.