நேபாளத்தில் தீவிரம் அடைந்த Gen-Z தலைமுறையினரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தில் அதிபர், பிரதமர், அமைச்சர்களின் மாளிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது.
ஊழல் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் அண்மையில் ‘நெப்போ பேபி’ என்ற பெயரில் நேபாளத்தில் வீடியோக்கள் பரவின. அதாவது நேபாளத்தின் அரசியல் தலைவர்கள், மூத்த அரசு அதிகாரிகள், பிரபலங்களின் வாரிசுகள் தங்களின் ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஃபேஸ்புக், யூ டியூப், எக்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதள கணக்குகளை நேபாள அரசு கடந்த 5-ம் தேதி முடக்கியது. இது, நேபாள இளம் தலைமுறையினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி மிகப் பெரிய போராட்டத்துக்கு வித்திட்டது.
தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் சர்மா ஒலி ஆகியோர் இல்லத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 19 பேர் இறந்தனர். 400 பேர் காயம் அடைந்தனர்.
நேபாளம் முழுவதும் வன்முறை, கலவரம் வெடித்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகர் காத்மாண்டுவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். காத்மாண்டுவில் உள்ள அதிபர், பிரதமர், உள்துறை அமைச்சரின் மாளிகைகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கும் தீ வைக்கப்பட்டது. தப்பியோடிய நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
காத்மாண்டுவில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர்கள் பிரசண்டா, ஷெர் பகதூர் தேவ்பா, அமைச்சர் பிருத்வி உட்பட மூத்த அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
முன்னாள் பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பாவை ஒரு தரப்பினர் அடித்து உதைத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார். நேபாள நிதித் துறை அமைச்சர் விஷ்ணு பவுடாலை, போராட்டக்காரர்கள் காத்மாண்டின் பிரதான தெருவில் ஓடவிட்டு அடித்து உதைத்தனர்.
நேபாள முன்னாள் பிரதமர் சாலாநாத் கனாலின் வீடு காத்மாண்டுவில் உள்ளது. அந்த வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதில் சாலாநாத்கனாலின் மனைவி ராஜலட்சுமி உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்டார். உடல் முழுவதும் கருகிய நிலையில் அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
நேபாள வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த டாக்டர் அர்சு ராணா தேபா (63) வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காத சூழலில், நேபாள ராணுவம் காத்மாண்டுவின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேபாள அதிபர் அதிபர் ராம் சந்திரபால் முன்வந்துள்ளார். நாட்டின் பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தாமல், அமைதியை கடைப்பிடித்து பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என அவர் நேபாள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை உடனடியாகக் கலைக்க வேண்டும், குடிமக்கள், நிபுணர்கள், இளைஞர்கள் பிரதிநிதித்துவத்தோடு நேபாள அரசமைப்பை முழுவதுமாக திருத்தி எழுத வேண்டும் என்று இளம் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
விரைவில், நியாயமான நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும்; கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஊழல் குறித்தும், அரசுடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்த வேண்டும்; சட்டவிரோத சொத்துகள் தேசிய உடைமையாக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோருகின்றனர்.
‘அமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்கள் தேவை. குறிப்பாக கல்வி, சுகாதாரம், நீதித்துறை, பாதுகாப்பு, தொலைதொடர்பு துறைகளில் சீர்திருத்தம் தேவை’ உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த நேபாள ராணுவம், நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது. பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.