நெல்லையில் நெல்லையப்பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் விமரிசையாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். | மு.லெட்சுமி அருண்
நெல்லையப்பர் கோயிலில் கடந்த 30-ம் தேதி ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான செவ்வாய்க்கிழமை முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
அதிகாலை சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர், அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
1,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், 3 ட்ரோன் கேமராக்கள் மற்றும் 300 கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், நெல்லை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.