kodaikanal flower show photo gallary images 
ஆல்பம்

எப்படி இருக்கிறது கொடைக்கானல் மலர் கண்காட்சி? - ஸ்பாட் விசிட் ஆல்பம்

Author : செய்திப்பிரிவு

கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா சனிக்கிழமை (மே 24)  தொடங்கியது. இதில், ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்ட திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, அணில் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன. |  படங்கள்: நா. தங்கரத்தினம்
 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசனில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுகிறது. 
 

இந்த மலர் கண்காட்சியை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணகள் வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான 62-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா சனிக்கிழமை (மே 24) காலை தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி நடவு செய்யப்பட்ட சால்வியா, பிங்க் அஸ்டர், டேலியா உட்பட 26 வகையான 2 லட்சம் மலர்ச் செடிகள் பூத்துக் குலுங்கின.
 

கண்காட்சியின் சிறப்பு அம்சமாக திண்டுக்கல் பூட்டு, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஆயக்குடி கொய்யா, பூனை, மயில் ஆகியவை ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. 

காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட யானை, பஞ்சவர்ணக்கிளி, மலை குருவி, பான்டா கரடி ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

சுற்றுலா பயணிகள் அவற்றை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடக்க விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
 

கோடை விழாவையொட்டி, படகு போட்டி, படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. 

ஜூன் 1-ம் தேதியுடன் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நிறைவு பெறுகிறது. 
 

மலர் கண்காட்சியையொட்டி பிரையன்ட் பூங்காவில் பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 

9 நாட்களுக்கு மட்டும் பிரையன்ட் பூங்கா நுழைவு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT