2,000 acres of samba crops submerged in rain in Thanjavur 
ஆல்பம்

தஞ்சாவூரில் மழைநீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள் - புகைப்படத் தொகுப்பு by ஆர்.வெங்கடேஷ்

Author : செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் அருகே ஆர்சுத்திப்பட்டு, அரசப்பட்டு, அருமலைக்கோட்டை, நார்த்தேவன் குடிக்காடு, வடக்கு நத்தம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கல்லணைக் கால்வாய் ஆற்றின் நெ.1 வாய்க்கால் மூலம் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.
 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் இப்பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கினர். அந்த நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயராக உள்ளன. இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடை செய்யப்பட இருந்த நிலையில், தொடர்ந்து கனமழை பெய்ததால், வயல்களில் தண்ணீர் தேங்கியது. 
 

இந்தப் பகுதியில் உள்ள செண்பகபுரம் வடிகால் வாய்க்கால் தூர் வாரப்படாததால் மழைநீர் வடிவதில் காலதாமதம் ஏற்பட்டு, நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அந்த வகையில், 2 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
 

அதேபோல, இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் உடைய இந்த நெற்பயிர்களும் மழைநீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. 
 

வயல், வரப்புகள் ஏதும் தெரியாத வகையில் கடல்போல மழைநீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், வேளாண்மைத் துறை அதிகாரிகள் ஆர்சுத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, மழையால் பாதிக்கப்பட்ட வயல்கள் குறித்து கணக்கெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து ஆர்சுத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோ.சாமி அய்யா கூறும்போது, “ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்து, இன்னும் ஒரு வார காலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் சம்பா நெற்பயிர்கள் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டன” என்றார்.
 

மேலும், “மகசூல் இழப்பு, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு கணக்கெடுப்பு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதேபோல, பயிர்க் காப்பீட்டுக்கு உரிய இழப்பீட்டையும் தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT