Andhra, Telangana Heavy rains affected and rescue operations 
ஆல்பம்

ஆந்திரா, தெலங்கானா கனமழை பாதிப்பும், மீட்பு பணிகளும் - புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு

ஆந்திரா, தெலங்கானாவில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ள நிலையில், 2 மாநிலங்களிலும் பல பகுதிகளில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம்உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. படங்கள்: கிரி கே.வி.எஸ்

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், ஆந்திராவில் விஜயவாடா நகரத்தை வெள்ளம் சூழ்ந்தது.

பிரகாசம் அணையின் மதகு, வெள்ளத்தில் சேதமடைந்ததால் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறியது. கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. செல்போன் டவர்கள் செயலிழந்ததன. பல லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. விஜயவாடா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கின.

ஆந்திராவில் கிருஷ்ணா, பிரகாசம், குண்டூர், விசாகப்பட்டினம், நந்தியால், கோதாவரி மாவட்டங்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

படகுகள் மூலம் தாழ்வான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, திருமண மண்டபங்கள், பள்ளி, கல்லூரிவளாகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு உணவு வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது. மீட்பு, நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

நேற்று காலை முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீட்பு குழுவினருடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆந்திராவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவித்து அதற்கான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியபோது, ‘‘கடந்த 5 ஆண்டு ஜெகன் ஆட்சியில் நடந்த அலட்சியப்போக்கும், முரண்பாடான ஆட்சியும்தான் இந்த வெள்ளத்துக்கு காரணம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடைசி நபரை மீட்டெடுத்து, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை நான் ஆட்சியர் அலுவலகத்தில்தான் இருப்பேன். இதை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்குஹெலிகாப்டர், ட்ரோன் மூலம் உணவு, மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தெலங்கானாவிலும் கன மழை காரணமாக நல்கொண்டா, கம்மம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பேரிடர் மீட்புகுழுவினர் இரவு, பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை தெலங்கானாவில் 18-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SCROLL FOR NEXT