Heavy rains flood Andhra: People rescued by boats - Photo Story 
ஆல்பம்

ஆந்திராவில் கனமழையால் வெள்ளம்: படகுகள் மூலம் மக்கள் மீட்பு - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினம் அருகே நேற்று அதிகாலையில் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. படங்கள்: ஜி.என்.ராவ்

தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்களின்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவு, குடிநீர் இல்லாமல் அப்பகுதி மக்கள்அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. கனமழை, நிலச்சரிவு தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா, கோதாவரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

கனமழை புரட்டிப்போட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. 
விஜயவாடாவில் ஞாயிறு பின்னிரவில் ஆய்வைத் தொடங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாலை 3 மணி வரையிலும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு நிலவரங்களையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஆய்வில் ஈடுபட்டார்.

“கனமழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விஜயவாடா வெள்ளக் காடாகியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மாநில அரசு மழை பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது” என்றார் சந்திரபாபு நாயுடு.

விஜயவாடாவில் மட்டும் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

ஆந்திரா மழை வெள்ளத்தால் இதுவரை 1,11,259 ஹெக்டேர் அளவிலான வேளாண் பயிர்களும், 7,360 ஹெக்டேர் அளவிலான தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் நேற்று (செப்.1) 28.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

SCROLL FOR NEXT