78th Independence Day Celebration at Delhi Red Fort 
ஆல்பம்

News In Pics: செங்கோட்டையில் சுதந்திர தின விழா தருணங்களும், மோடி உரையின் அம்சங்களும்!

Author : செய்திப்பிரிவு

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற இந்த விழாவின் தருணங்களுடன், பிரதமர் மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்ங்கள் இங்கே...

“இயற்கை பேரிடரில் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களையும், சொத்துகளையும் இழந்துள்ளனர்; தேசமும் நஷ்டத்தை சந்தித்தது. அவர்கள் அனைவருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்றார் பிரதமர் மோடி. 

“நமது தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் வேதனையளிக்கிறது. சமூகமும், நாடும், மாநில அரசுகளும் இதனை தீவிரமாக எடுத்துக்கொண்டு, சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்” என்றார். 

“#VocalForLocal என்பது இந்திய பொருளாதாரத்தின் மந்திரமாக மாறியுள்ளது. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மூலம் ஒவ்வொரு மாவட்டமும் இப்போது அதன் உற்பத்தியில் பெருமை கொள்கிறது மற்றும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற அதன் தனித்துவமான பலத்தை அடையாளம் காண முயல்கிறது” என்றார். 

“ஏன் ஒவ்வொரு உபகரணத்திலும் 'மேட் இன் இந்தியா' சிப் இருக்கக் கூடாது? இந்தக் கனவை நனவாக்கும் ஆற்றல் நம் நாட்டிற்கு உண்டு. 6G நெட்வொர்க்குகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம்” என்றார்.

“மருத்துவ படிப்பில் 75000 புதிய இடங்கள் அறிமுகப்படுத்தப்படும் #ViksitBharat-இன் முதல் தலைமுறைக்கு சிறப்பு கவனம் செலுத்தி தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம்” என்றார் பிரதமர் மோடி.

‘வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தமது தொலைநோக்கு கொள்கையை ஓர் இயக்கமாக செயல்படுத்த இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முறையான மதிப்பீடுகள், கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதன் வாயிலாக நகர்ப்புறங்களில் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியாவை உலகின் முன்னணி நாடாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்து, தொழில்நுட்ப தன்னிறைவை அதிகரிக்க வேண்டும் என்றார்.

2024 பட்ஜெட் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்திய இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, உலகின் திறன்மிகு தலைநகராக மாற்றும் நோக்கில் அரசு அறிவித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.

இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றியமைப்பதற்கான தொலைநோக்குப் பார்வையை வெளியிட்ட பிரதமர் மோடி, அதன் பரந்து விரிந்த வளங்கள் மற்றும் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கான திட்டங்களையும் அறிவித்தார்.

உள்நாட்டு வடிவமைப்பு திறன் குறித்து பாராட்டிய பிரதமர், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யுமாறும் வலியுறுத்தினார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களை சந்தைப்படுத்த, இந்தியா தனது செழுமையான பழங்கால மரபுகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 

உலகளாவிய விளையாட்டுச் சந்தையில் இந்திய வல்லுநர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், விளையாடுவதில் மட்டுமின்றி, விளையாட்டுகளை உருவாக்குவதிலும் முன்னோடியாக திகழ்வதுடன், இந்திய விளையாட்டுகள் உலகளவில் சென்றடைய செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் முயற்சியில் பசுமை வேலைவாய்ப்புகளின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். பசுமை வளர்ச்சி மற்றும் பசுமை வேலை வாய்ப்பில் நாடு தற்போது கவனம் செலுத்துவதாக கூறிய அவர், இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதென்ற இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.  

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்தியா ‘ஆரோக்கியமான இந்தியா’ என்ற பாதையை பின்பற்ற வேண்டும் என்று கூறிய பிரதமர், இதற்காக தேசிய ஊட்டச்சத்து இயக்கம் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்கவும், நல்லாட்சிக்கான உத்தரவாதம் வழங்கவும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், மாநில அரசுகள் தெளிவான கொள்கைகளை உருவாக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

உலக குறியீடுகளுக்கேற்ப இந்தியாவின் தரம் : தர நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கான உறுதிப்பாடு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்தியாவின் தர விதிகள் சர்வதேச குறியீடாக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றார்.

2030-க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என்ற இலக்கை அடைவதற்கான இந்தியாவின் குறிக்கோளையும் பிரதமர் மீண்டும் உறுதிப்பட தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட இருப்பதாக அறிவித்த பிரதமர் மோடி, நாட்டின் மருத்துவக் கல்வி திறனை விரிவுபடுத்தி, அதிகரித்து வரும் சுகாதார சேவை வல்லுநர்களின் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம் என்றார்.

அரசியலில் ஒரு லட்சம் இளைஞர்களை, குறிப்பாக அரசியல் பின்புலம் இல்லாத குடும்பங்களை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். வாரிசு, சாதிய தீமைகளை எதிர்த்துப் போராட, இந்திய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT