33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வெள்ளிக்கிழமை இரவு கோலாகலமாக தொடங்கியது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்தக் கூடாது என்று கூறி ஒரு தரப்பினர் அந்நாட்டில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் பாரிஸ் நகருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் ஒருவழியாக போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததும், ஏராளமான மக்கள் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா அணிவகுப்பு நடைபெறும் சீன் நதிக்கரையில் குவியத் தொடங்கினர்.
அசம்பாவிதங்களை தடுக்க பாரிஸ் நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் 45 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா, விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது.
பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக தொடக்க விழா அணி வகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் முதல் நாடாக கிரீஸ் இடம்பெற்றது. கிரீஸில் தான் 1896-ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்டது.
இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் முதல் நாடாக கிரீஸ் இடம்பெற்றது. கிரீஸில் தான் 1896-ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்டது.
சுமார் 100 படகுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தியபடி 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர்.
இந்த அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசிய கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறையாகும்.
மிதக்கும் அணிவகுப்பு ஜார்டின் டெஸ்பிளான்ட்ஸுக்கு அருகிலுள்ள ஆஸ்டர்லிட்ஸ் பாலத்திலிருந்து புறப்பட்டு ட்ரோகாடெரோவில் முடிவடைந்தது.
அணிவகுப்பைத் தொடர்ந்து தொடக்க விழா இறுதிக்கட்ட நிகழ்ச்சிகள் டொரக்கடேரோ என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றன.
ஒலிம்பிக் தொடக்க விழா பிரபல அமெரிக்க பாப் பாடகி லேடி காகா மேடையில் தோன்றி பாடல் பாடினார்.
மேடை நிகழ்வுகளைத் தொடர்ந்து வானவேடிக்கைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தன.