Modi at a road show in Coimbatore
கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து தமிழக காவல் துறை மற்றும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்போடு கோவை சாய்பாபா கோயிலில் இருந்து துவங்கிய ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றார்.சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள பாஜக தொண்டர்கள் வழிநெடுகிலும் பிரதமருக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.சுமார் இரண்டரை கி.மீட்டர் தூரம் பிரதமர் மோடி திறந்தவெளி வாகனத்தில் இருந்தபடியே சாலையின் இருபுறங்களிலும் இருக்கும் மக்களைச் சந்தித்தார். இதையொட்டி, கோவை மற்றும் கோவையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்.நாதஸ்வரம், தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சாலையின் இருபுறங்களிலும் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் கலை குழுவினரால் நடத்தப்பட்டன.நீலகிரி மாவட்ட தோடர் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் சாலையின் இருபுறங்களிலும் நின்று மோடியை பார்த்து வாழ்த்து தெரிவித்தனர்.மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தவாறு கை அசைத்தபடி வாகனத்தில் பிரதமர் சென்றார். இந்நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.மக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள சூழலில், பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி திங்கள்கிழமை கோவைக்கு வந்தார். கோவையில் வழக்கமாக அவர் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார்.ஆனால், இந்த முறை , பொதுக் கூட்டத்துக்கு பதில், ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தார். | படங்கள்: ஜெ.மனோகரன், பெரியசாமி