How is Alankanallur Keelakarai Jallikattu Ground? - Spot visit clicks
நாட்டிலேயே முதன்முறையாக அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66.8 ஏக்கரில் ஒரே நேரத்தில் 4,500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் மூன்று தளங்களுடன் பிரம்மாண்ட மைதானம் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ளது.இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் அமர பாதுகாப்பான கேலரிகள் உயர் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன.தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், தற்காலிக விற்பனைக் கூடம், பொருட்கள் பாதுகாப்புப் பெட்டகம், தங்கும் அறைகள் உள்ளன.16,921 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள முதல் தளத்தில் முக்கியப் பிரமுகர்கள் அமரும் அறை மற்றும் அவர்கள் தங்கும் அறைகள், உணவு வைப்பு அறைகள் இடம்பெறுகின்றன.9,020 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் தளத்தில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைப்பறை உள்ளன.1,140 சதுர அடியில் அமைக்கப்படும் மூன்றாம் தளத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மைதானத்தில் முகப்பு நுழைவாயிலில் காளைகள் சிற்ப பீடம், பார்வையாளர்கள் எளிதாக மைதானத்துக்கு வந்து போட்டிகளைப் பார்த்துச் செல்வதற்காக பிரத்யேக தார்ச்சாலைகள் வசதி, மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி, பார்வையாளர்களைக் கவர செயற்கை நீரூற்று, புல் தரை அமைக்கப்பட்டுள்ளன.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க 50,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 50,000 லிட்டர் தரைத்தள நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன.முந்தைய நாளே வரும் காளைகள் உரிமையாளர்கள் ஓய்விடம், காளைகள் ஓய்விடம், கழிப்பறை வசதிகள், கால்நடை மருந்தகம், மாடுபிடி வீரர்கள் சிகிச்சை பெற மருத்துவமனை, வாடிவாசல் செல்லும் காளைகள் பரிசோதனைக்கூடம் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.ஒரு கிரிக்கெட் மைதானத்தில் என்னென்ன வசதிகள் இருக்குமோ, அத்தனை வசதிகளும் இந்த மைதானத்தில் ஏற்படுத்தப்படுகிறது.ஜல்லிக்கட்டு மைதான வளாகத்தில் அருங்காட்சியகம் அமைகிறது. அதில், ஜல்லிக்கட்டு மட்டு மில்லாது பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம், கபடி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் காட்சிப்படுத்தும் பணி நடக்கிறது.“இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார். தொடக்க விழா அன்று இந்த அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.“ஜல்லிக்கட்டு அரங்குக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திடும் நோக்கில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக 21.40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூபாய் 28.50 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமைதாரர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.