ஆல்பம்

குலசேகரன்பட்டினம் தசரா தருணங்கள் - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Author : செய்திப்பிரிவு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் 11 நாள் தசரா திருவிழா புதன்கிழமை நிறைவு பெற்றது. | படங்கள்: மதன் சுந்தர்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதிகள்தோறும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலித்தனர்.
விழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அன்றைய தின இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகமும், 11 மணிக்கு மகா அலங்கார பூஜையும் நடைபெற்றன.
அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசாசூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரை நோக்கி புறப்பட்டார்.
வழியெங்கும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை வாழ்த்தி முழக்கமிட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையை அடைந்த அம்மன், அங்கு சுயரூபத்துடன் ஆக்ரோஷமாக வந்த மகிசாசூரனை சம்ஹாரம் செய்தார்.
தொடர்ந்து 12.08 மணிக்கு சிங்கம் தலை, 12.10 மணிக்கு எருமை தலை, 12.24 மணிக்கு சேவல் தலையுடன் உருமாறி வந்த மகிசாசூரனை அம்மன் வதம் செய்தார்.
அப்போது கடற்கரையில் திரண்டிருந்த பக்தர்கள் விண்ணதிர ‘தாயே முத்தாரம்மா’, ‘ஓம் காளி’, ‘ஜெய்காளி’, ‘வெற்றி அம்மனுக்கே' என முழக்கமிட்டனர்.
இதனையடுத்து கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், அபிஷேக மேடை மற்றும் கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து நேற்று (அக்.25) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு மேல் கோயிலை வந்தடைந்தார். தொடர்ந்து கொடியிறக்கப்பட்டது.
பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவு செய்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகத்துடன் தசரா திருவிழா நிறைவடைந்தது.
படங்கள்: மதன் சுந்தர் | தொடர்புக்கு: madhansphotography@hotmail.com
SCROLL FOR NEXT