மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். | படங்கள்: எஸ்.சத்தியசீலன், வேளாங்கண்ணி ராஜ்.நாட்டின் பசுமை புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 98.சுற்றுச்சூழல், வேளாண்மை துறையில் அளப்பரிய பங்காற்றிய எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் விதமாக, அவருக்கு காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டை ரத்னா நகரில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை காலை 11.20 மணி அளவில் காலமானார். இதையடுத்து, அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமமுக துணை பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், ‘இந்து’ என்.ராம், தமிழ்நாடு அனைத்துவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வரும் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்காக, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை வளாகத்தில் அவரது உடல் வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் சனிக்கிழமை காலை 10 மணி வரை வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் சனிக்கிழமை நடைபெறுகிறது.“எனது தந்தை கடந்த 10 நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் விரும்பியபடி, வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது. வேளாண்மை, விவசாயிகள், அவர்களது வாழ்வாதாரத்தை எப்படி முன்னேற்றலாம், அதற்கு அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பது போன்ற எண்ணங்களே அவரது மனதில் எப்போதும் ஓடிக்கொண்டிருந்தன. குறிப்பாக, பெண் விவசாயிகள் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார்” என்று எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு குறித்து அவரது மகள் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.தலைமைச் செயலக பணிகளை முடித்துவிட்டு வெள்ளிக்கிழமை தரமணி சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எஸ்.சுவாமிநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோரும் முதல்வருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.பின்னர், எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள், சவுமியா சுவாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சடங்கில் தமிழக அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து தலைவர்களும் பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.வாழ்க்கை வரலாறு: பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் 1925 ஆகஸ்ட் 7-ம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் கே.சாம்பசிவன், அறுவை சிகிச்சை நிபுணர். தாயார் பார்வதி தங்கம்மாள்.கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார் சுவாமிநாதன். தங்கள் மகன் மருத்துவராக வேண்டுமென்பது அவரது பெற்றோரின் விருப்பம். ஆனால், 1982-ல் வங்கதேசத்தில் ஏற்பட்ட பஞ்சம், எம்.எஸ்.சுவாமிநாதனை பெரிதும் பாதித்தது. அதன் காரணமாக, வேளாண் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட முடிவுசெய்தார்.திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் படித்த பின்னர், கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி. விவசாயப் பட்டமும், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரபணுப் பயிர்கள் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார். தொடர்ந்து, அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார்.அவருக்கு அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதில் சேராமல், 1954-ல் இந்தியா திரும்பினார். மத்திய அரசுப் பணியில் சேர்ந்த அவர், 1954 முதல் 1972 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்திலும், 1972 முதல் 1980 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலிலும் பணியாற்றினார்.தொடர்ந்து, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1988 வரை பணிபுரிந்தார். வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார்.புதிய ரக கோதுமைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி, கோதுமை உற்பத்தியைப் பெருக்கி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டைப் பெற்றார். அரிசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் பல புதிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தி, நெல் விளைச்சலிலும் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்தார்.இயந்திரமயமாக்கப்பட்ட பண்ணைக் கருவிகள், நீர்ப்பாசன முறைகள், களைக்கொல்லி மருந்துகள், உரங்கள் என விவசாயத்தில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி, விவசாயத்தை நவீன தொழில் துறை அமைப்பாக மாற்றினார்.இதனால் வேளாண் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின. வேளாண் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்துவந்த நிலை மாறி, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையை உருவாக்கினார்.1988-ல் சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவினார்.இந்த நிறுவனம் கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காகவும், வேளாண் ஆராய்ச்சிக்காகவும் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பாடுபட்டு வருகிறது. இதன் நிறுவனராகவும், தலைமை ஆலோசகராகவும் பணியாற்றினார் எம்.எஸ்.சுவாமிநாதன்.இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு மற்றும் வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வால்வோ விருது, ஆசியாவின் நோபல் பரிசு என்று கருதப்படும் ராமன் மகசேச விருது, எம்.எஸ்.பட்நாகர் விருது உள்ளிட்ட 41 தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். உலக அளவில் 38 பல்கலைக்கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளன.இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் எம்.எஸ்.சுவாமிநாதன் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
மத்திய வேளாண் அமைச்சக செயலர், மத்திய திட்டக்குழு உறுப்பினர், தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர், உணவுப் பாதுகாப்புக்கான உலக குழுவின் உயர்நிலை நிபுணர் குழுத் தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.20-ம் நூற்றாண்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ்பெற்ற `டைம் இதழ்' வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, சவுமியா சுவாமிநாதன், மதுரா சுவாமிநாதன், நித்யா ராவ் ஆகிய 3 மகள்கள் உள்ளனர். சவுமியா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எஸ்.சுவாமிநாதனின் மனைவி மீனா சுவாமிநாதன், கடந்த ஆண்டு காலமானார்.