ஆல்பம்

விக்ரம் லேண்டர், ரோவரின் மினியேச்சரை வடிவமைத்த ஓய்வு பெற்ற காவலர்! - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் போன்றவற்றை அப்படியே பிரதிபலிக்கும் மினியேச்சர் ரக மாடலை வடிவமைத்துள்ளார் தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.ஸ்ரீனிவாஸ். | படங்கள் & தகவல்: ம.பிரபு
அண்மையில் நிலவில் இந்தியாவின் சந்திரயான்-3 மிஷன் வெற்றிகரமாக அதன் இலக்கை அடைந்தது. இந்தியா மட்டுமல்லாது உலகமே இஸ்ரோவின் இந்த சாதனையை வியப்புடன் பார்த்து, போற்றி வருகின்றனர்.
இந்திய மக்கள் சிலர் சந்திரயான்-3 மிஷனின் வெற்றியை கொண்டாடும் வகையில் தனித்துவ செயல்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் சந்திரயான் திட்டம் சார்ந்த விக்ரம், பிரக்யான், சந்திரயான் என பூமியில் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டி அழகு பார்த்துள்ளனர்.
இந்நிலையில், சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் போன்றவற்றை அப்படியே பிரதிபலிக்கும் மினியேச்சர் ரக மாடலை வடிவமைத்துள்ளார் தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஜி.ஸ்ரீனிவாஸ்.
இவர் தமிழக காவல் துறை தலைமை (டிஜிபி) அலுவலகத்தில், உளவுத்துறை பிரிவில் சீனியர் போட்டோகிராபராக பணியாற்றியவர். சுமார் 31 ஆண்டுகள் மற்றும் 10 மாத காலம் காவல் துறையில் பணியாற்றி உள்ளார்.
மினியேச்சர் கலை மீது சிறு வயது முதலே அவருக்கு ஆர்வம் அதிகம். நாகர்கோவில் டிவிடி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தபோது விமானம் ஒன்றை மினியேச்சர் வடிவில் வடிவமைத்ததில் தொடங்கியுள்ளது அவரது கலை பயணம். அதற்கு அவரது அறிவியல் ஆசிரியர் சீட்டு பெருமாள் உதவியுள்ளார். பள்ளி படிப்பை நிறைவு செய்த பிறகும் வெவ்வேறு பொருட்களை மினியேச்சராக வடிவமைத்துள்ளார்.
ஓய்வுக்கு பிறகு காவல் துறையில் 1929-ல் பயன்படுத்தப்பட்ட கார், 1959-ல் பயன்படுத்தப்பட்ட கார், 1970-ல் சென்னையில் இயங்கிய டபுள் டக்கர் பஸ், முதன்முதலாக விடப்பட்ட சவுண்ட் ராக்கெட், வயலை உழவ பயன்படும் கலப்பை போன்றவற்றை தேக்கு மரத்தில் வடிவமைத்துள்ளார்.
தற்போது சந்திரயான்-3ல் பயன்படுத்தப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிர்க்யான் ரோவரை அப்படியே தத்ரூபமாக பிரதி எடுத்தது போல மினியேச்சர் வடிவில் உயிர் கொடுத்துள்ளார். இதன் அசல் இப்போது நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இந்த கால சூழலில் மாணவர்கள் மினியேச்சர் கலையை கற்க வேண்டும் என்பது இவரது விருப்பமாக உள்ளது. | | படங்கள் & தகவல்: ம.பிரபு
SCROLL FOR NEXT