ஆல்பம்

கல்வி அறக்கட்டளை நிகழ்வில் நடிகர் சூர்யா - போட்டோ ஸ்டோரி

Author : செய்திப்பிரிவு
நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற, மாணவர்களுக்குப் பரிசளித்து பாராட்டி வருகிறார்.
இந்த அறக்கட்டளையின் 44-ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,50,000 பரிசளிக்கப்பட்டது.
இத்துடன் திண்டிவனம் கல்வி மேம்பாட்டு குழு நடத்தும், ‘தாய்தமிழ் பள்ளிக்கு’ நிதி உதவியும், ஓவிய கலைஞர் ஜெயராஜுக்கு ரு.1 லட்சமும் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் சோமாண்டர்குடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஞான பிரகாசத்தின் பணிகளுக்காகவும், 'குறள் வழி கல்வி' என திருக்குறளின் மேன்மையை முன்னெடுத்து வரும் திருச்சி சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குப் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவில் அகரம் ஃபவுண்டேஷன் நிறுவனர், நடிகர் சூர்யா பேசும்போது, “உதவி பண்ணுவது என்பதை விட, அதைத் தொடர்ச்சியாக பண்ணுவது சவாலானது. எல்லோருக்கும் சமூக அக்கறை வேண்டும். எல்லோருக்கும் இருக்கும் அந்த அக்கறைதான் எங்களுக்கும் இருக்கிறது” என்றார்.
“மேடை இருப்பதால் அது அதிகமாகத் தெரியலாம். மேடை இல்லாமல் உதவி செய்துகொண்டிருப்பவர்கள் ஏராளம். அதனால்தான் இந்தச் சமூகம் இன்னும் அழகாக இருக்கிறது” என்றார் சூர்யா.
“கல்வி மூலமாகத்தான் எல்லாம் மாறுகிறது. கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியைப் படியுங்கள். சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. அதைத் தாண்டி வாழ்க்கையை எப்படி பார்க்கப் போகிறோம் என்பது முக்கியம். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை கிடையாது” என்று சூர்யா கூறினார்.
“சமமான கல்வியை கொடுக்க வேண்டும் என்று தொடங்கப்பட்ட அகரம் பவுண்டேஷனால், 5200 மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை தொட முடிந்திருக்கிறது. அதற்கு 14 வருடங்கள் ஆனது. இப்போது அரசுடன் இணைந்து செயல்படும்போது 3 வருடத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடிந்திருக்கிறது” என்றார்.
மேலும், “அரசுடன் இணைந்து செயல்படுவது அகரத்துக்கு கிடைத்திருக்கும் பெருமை. மற்றவர்களின் உணர்களோடு சேர்ந்து இருக்கும்போது, பரந்த மனதோடு இருக்கும்போதுதான் மனிதம் உயர்கிறது. யாரையும் பழிசொல் பேசாமல் பரந்த மனதோடு இருப்போம்” என்று நடிகர் சூர்யா பேசினார்.
SCROLL FOR NEXT