மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்துக்காக மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடியும் செலவிடப்பட்டது.இந்த பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், தரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டதாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், செய்தி - நாளிதழ் சேமிப்பு, நூல்கள் கட்டும் பிரிவு போன்றவை அமைந்துள்ளன. தரைத்தளத்தில் கலைக்கூடம், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டு கூடம், ஓய்வறை, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகை பயன்பாட்டு அரங்கம், உறுப்பினர் சேர்க்கை பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன.முதல் தளத்தில் கலைஞர் பகுதி, குழந்தைகள் நூலகம், நாளிதழ்கள் - பருவ இதழ்கள் படிக்கும் பகுதி, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, அறிவியல் கருவிகள் பிரிவு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவு, கலைஞரின் நூல்களைக் கொண்ட பிரிவு எனச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.மூன்றாவது தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் உள்ளன. நான்காவது தளத்தில், எதிர்காலக் கனவுகளுடன் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணாக்கர் மற்றும் இளைஞர்களின் கனவு நனவாகும் வகையில் ஏறத்தாழ 30 ஆயிரம் புத்தகங்களுடனான பகுதி அமைக்கப்பட்டுள்ளது.ஐந்தாவது தளத்தில் மின்னணுத் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய தலைமுறைக்குத் தேவையான அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் தருவதற்கான பகுதி உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறாவது தளத்தில் நூல் பகுப்பாய்வு, நூல் பட்டியல் தயாரித்தல் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் சார்ந்த பகுதிகள் இடம்பெற்றுள்ளன.மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், “அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட இந்த நகரத்தில், லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது” என்றார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை மதுரை புதுநத்தம் சாலையில் அமைந்துள்ள பொதுப் பணித் துறை வளாகத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை அடுக்கிய அவர் பேசியது:
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகாதாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத்தேன். ஒரு மாதம் கழித்து ஜூலை 15-ஆம் நாளான இன்றைக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரையில் திறந்து வைத்திருக்கின்றேன்.“சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும். இவை இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள்” என்றார்.“சிலப்பதிகாரம் குறித்தும் காற்சிலம்போடு நீதி கேட்ட கண்ணகி குறித்தும் கலைஞர் தீட்டாத எழுத்து ஓவியங்கள் இல்லை. ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட இந்த நகரத்தில் லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது. திராவிட இயக்கம் என்றாலே அறிவியக்கம்தான்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.“பொதுப்பணி மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட இந்த நூலகம் இவ்வளவு பிரம்மாண்டமாக அமைய கடுமையாக உழைத்திருக்கக் கூடிய கடைக்கோடி மனிதர்கள் வரை அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.“ஷிவ் நாடாரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். பெரிதாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், இவரையும், இவரது மகள் ரோஷினியையும் மாணவ, மாணவியர்களான நீங்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகதான் நான் அழைத்துக் கொண்டு வந்திருக்கின்றேன். மிகப்பெரிய தொழில் அதிபர் என்று சொல்வது மட்டுமல்ல, அவருடைய பெருமை; இந்திய தொழிலதிபர்களில் அதிகமான தொகைளை நன்கொடையாக வழங்கக் கூடியவர் என்று பாராட்டப்படக்கூடியவர் அவர்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.“கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும், குழந்தைகள் – மாணவர்கள் - போட்டித் தேர்வர்கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்கள் - மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.“இன்றைக்கு நம்முடைய திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருக்கிறோம்” ” என்றார் முதல்வர் ஸ்டாலின்.“மாணவக் கண்மணிகளுக்கு நான் சொல்வது, அரசு உருவாக்கித் தரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். படிக்கின்ற காலத்தில் கவனச் சிதறல்கள் வேண்டாம். படிப்பு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படுங்கள். நாளைய நம்பிக்கை நீங்கள். நாளைய எதிர்காலம் நீங்கள். உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, இந்த நாடே உங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நா.தங்கரத்தினம், ஆர்.அசோக்