கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக் கானல், வட்டக்கானல் வனப்பகுதி அருகே அரிசிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வந்தது. வனப்பகுதியையொட்டிய கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசியை விருப்ப உணவாக உட்கொண்டதால் இந்த யானையை அரிசிக்கொம்பன் என அழைத்து வருகின்றனர்.தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் அரிசிக்கொம்பன் யானைக்கு கடந்த ஏப்.29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையான முல்லைக்கொடி வனப் பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர். இதன் கழுத்தில் பொருத்திய சாட்டிலைட் ரேடியோ காலர் மூலம் தமிழக, கேரள வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.அரிசிக்கொம்பன் யானை கடந்த 27-ம் தேதி வழித்தடம் தேடி கம்பம் நகருக்குள் புகுந்தது. பிரம்மாண்டமான உருவத்துடன், கம்பீரமான கொம்புகளுடன் தெருக்களில் ஓடிய இந்த யானையை பார்த்ததும் பலரும் மிரண்டு ஓடினர்.யானையின் பாதுகாப்புக்காக கம்பம், சுருளிப்பட்டியில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. பொதுமக்களின் நலனுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரிசிக்கொம்பனை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மயக்க ஊசி செலுத்துவதற்காக மருத்துவர் குழு தயார்படுத்தப்பட்டனர்.இருப்பினும் யாரையும் தொந்தரவு செய்யாத இந்த யானை, கம்பம் துணை மின் நிலையம் வழியாக புளியந்தோப்பில் தஞ்சம் புகுந்தது. மறுநாள் அதிகாலை மேகமலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. மீண்டும் நகருக்குள் இந்த யானை வருவதைத் தடுக்க வனத் துறையினர் மேகமலை அடிவாரத்தில் பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்ட நிலையில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்தது.மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அங்குள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இரவில் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேகமலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தற்போது தடை விதிக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் மலையடிவாரக் கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அரிசிக்கொம்பனால் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இதனிடையே, தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கடந்த 27-5-2023 அன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த பால்ராஜ் என்பவர் அரிசிக்கொம்பன் யானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக தேனி மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைப் பலனின்றி 30-5-2023 அன்று உயிரிழந்தார்.மேகமலைப் பகுதிக்கு யானை இடம்பெயர்ந்த பிறகு, அது மீண்டும் நகருக்குள் வந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு வளையம் அமைத்து வனத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களாக சண்முகாநதி அணை நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இந்த யானை இடம் மாறிக்கொண்டே இருந்தது.இந்நிலையில் ஜூன் 5 அதிகாலை எரசக்க நாயக்கனூர் அருகே பெருமாள்கோயில்பட்டி எனும் பகுதிக்கு யானை வந்தது. இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் இதற்கு மயக்க ஊசி செலுத்தினர். பின்பு கும்கி யானைகள் மூலம் இதனை வனத்துறை லாரியில் ஏற்றினர்.கம்பம் நகரில் அருகிலேயே ஓடிய போதும் இந்த யானை யாரையும் தாக்கவில்லை. தன் வழியே ஓடிச் செல்வதிலே முனைப்பு காட்டியது. இதனால் பலருக்கும் இந்த யானை மீதும் பற்றுதல் ஏற்பட்டது. யானைக்கு எவ்வித இடையூறும் இன்றி பிடிப்பதுடன், அதன் வாழ்விடத்திலேயே கொண்டு போய் விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.இதனைத்தொடர்ந்து, பிடிபட்ட இந்த யானைக்கு பலரும் பிரியாவிடை அளித்தனர். வழிநெடுகிலும் கை அசைத்து வழிஅனுப்பி வைத்தனர். இந்த யானை உத்தமபாளையம், சின்னமனூர், தேனி வழியே கொண்டு செல்லப்பட்டது. இந்த யானைக்கு முன்னதாக பாதுகாப்பு வாகனங்களும், பின்னால் வனத்துறையினரின் வாகனங்களும் சென்றன.துதிக்கை மற்றும் உடலின் பல பகுதிகளிலும் இந்த யானைக்கு காயம் உள்ளதால் உரிய சிகிச்சை அளித்த பிறகே இவற்றை வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அரிசிக்கொம்பன் யானை பிடிபட்டதால் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறையில் இருந்த 144 தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்தார்.தேனி மாவட்டத்தில் கம்பம் பகுதியில் முல்லை பெரியாறு அணை அருகே உள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்ட அரிசிக்கொம்பன் யானை, திருநெல்வேலி மாவட்டத்தில் மணிமுத்தாறு வனப்பகுதிக்குள் விடுவதற்கு வனத் துறையினர் முடிவு செய்து, அதை லாரியில் ஏற்றி சாலை மார்க்கமாக கொண்டுவந்தனர்.தகிக்கும் வெயிலுக்கு தாக்குப் பிடிக்காமல் யானை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் வழியில் பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையின் தண்ணீர் லாரிகளில் இருந்து யானை மீது தண்ணீரை தெளித்து அதை குளிர்விக்கும் நடவடிக்கையைும் வனத் துறையினர் செய்திருந்தனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் யானையை குளிப்பாட்டினர்.கம்பத்திலிருந்து திருநெல்வேலிக்கு கிட்டத்தட்ட 250 கி.மீ. தூரம் லாரியில் அழைத்து வரப்பட்ட அரிசிக்கொம்பன் மணிமுத்தாறு வனப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மணிமுத்தாறு சோதனை சாவடியிலிருந்து 75 கி.மீ. தொலைவில் அப்பர் கோதையாறு வனப்பகுதியில் யானை விடப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்தனர்.இதனிடையே, அடிக்கடி வாழ்விடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளால் யானைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த யானை தாக்கியதில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மணிமுத்தாறு வனப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளது மணிமுத்தாறு, சிங்கப்பட்டி, செட்டிமேடு பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் அரிசி கொம்பன் விடப்பட்டால், பரப்பளவு அதிகம் கொண்ட இந்த வனப்பகுயிலிருந்து அது மனித குடியிருப்பு பகுதிக்குள் வருவது கடினமென்று வனத் துறை கருதுகிறது. ஆனால், வாழ்விட மாற்றத்தால், சூழலியல் தகவமைப்பு ஒவ்வாமை காரணமாக வனத்தையொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுத்துமோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. | தகவல் உறுதுணை: அ.அருள்தாசன் | படங்கள்: மு.லெட்சுமி அருண்