ஆல்பம்

விருதுநகர் ‘டாப்’ முதல் 600-க்கு 600 வரை - பிளஸ் 2 முடிவுகளின் 10 ஹைலைட்ஸ்

Author : செய்திப்பிரிவு
தமிழகத்தில் பிளஸ் 3 தேர்வு முடிகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டனர். இதில் 7,55,451 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.03% ஆகும். 47,934 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் எண்ணிக்கை 4,05,753. தேர்ச்சி சதவீதம் 96.38. தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 3,49,697. தேர்ச்சி சதவீதம் 91.45.
7533 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.80 சதவீதம். 2767 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 326.
பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.29 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாட பிரிவுகளில் 96.32 சதவீத பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 91.63 சதவீத பேரும், கலைப் பிரிவுகளில் 81.89 சதவீத பேரும், தொழிற்பாடப் பிரிவுகளில் 82.11 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்-2, ஆங்கிலம்-15, இயற்பியல்-812, வேதியியல்-3909, உயிரியல்-1494, கணிதம்-690, தாவரவியல்-340, விலங்கியல்-154, கணினி அறிவியல்-4618, வணிகவியல்-5678, கணக்குப் பதிவியல்-6573, பொருளியல்-1760, கணினிப் பயன்பாடுகள்-4051, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334 மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் 97.85 சதவீத தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.79 சதவீதத்துடன் திருப்பூர் 2-வது இடத்தையும், 97.59 சதவீதத்துடன் பெரம்பலூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 87.30 சதவீதத்துடன் ராணிப்பேட்டை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
சிறைவாசிகள் 90 பேர் தேர்வு எழுதினர். இதில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி பார்த்தால், 87.78 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 4398 பேர் தேர்வு எழுதினர். இதில் 3923 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.20 சதவீதம்.
பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியில், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று என்று 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நாமக்கல், பள்ளிப்பாளையம் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த திருநங்கை மாணவி ஸ்ரேயா, +2 பொதுத் தேர்வில் வணிகவியல் பிரிவில் 337 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் தமிழத்தில், தேர்ச்சி பெற்ற ஒரே ஒரு திருநங்கை இவர் தான்.
பிளஸ் 2 மாணவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் 13-ம் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், மே 12 முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
SCROLL FOR NEXT