உலகம்

ஜென் ஸீ போராட்டம் முதல் எண்ணெய்ப் போர் வரை: உலகம் 2025 - ஒரு விரைவுப் பார்வை

ம.சுசித்ரா

புரட்டிப்போட்ட புயல்கள்: நவம்பர் இறுதியில் சுமத்ரா தீவு, தெற்கு தாய்லாந்து, மலேசியாவை சென்யார் புயல் தாக்கியது. பெருமழை, வெள்ளம், நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து வங்கக் கடலில் உருவான டிட்வா புயலின் காரணமாக இலங்கையில் 638 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரரீதியாக அந்நாட்டுக்கு மேலும் இழப்பு ஏற்பட்டது.

குடியேற்றக் குழப்பம்: குடியேற்ற விதிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்தது அமெரிக்க அரசு. எச்1பி விசாவுக்கான ஓராண்டுக் கட்டணம் ரூ.1.32 லட்சத்திலிருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்டது, இது இந்தியத் தொழில்நுட்பப் பணியாளர்களைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இது தவிர, 39 நாடுகளுக்கு முழுமையான அல்லது பகுதி அளவு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு காலநிலை மாநாடு: 30ஆவது ஐ.நா. காலநிலை மாநாடு (காப் 30) பிரேசில் அமேசான் பகுதியைச் சேர்ந்த பெலெம் நகரில் நடைபெற்றது. உலகளாவிய வெப்ப நிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் குறைத்தல், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டாலும் முக்கிய முடிவுகள் எட்டப்படாதது விமர்சனத்துக்குள்ளானது.

ஜென் ஸீ போராட்டம்: ஊழல், வேலையின்மை, நிர்வாகச் சிக்கல்களுக்கு எதிராக ஜென் ஸீ தலைமுறையினர் நடத்திய போராட்டங்களின் விளைவாக 2025 செப்டம்பரில் நேபாள ஆட்சி கவிழ்ந்தது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அடுத்த பொதுத் தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் போர் நிறுத்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஜன.19, 2025இல் அமலுக்கு வந்தது. ஆனாலும் ஜூன் மாதத்தில் 10 நாள்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக இரு தரப்பும் போர் தொடுத்தன. அக்டோபர் 13இல் எகிப்தில் நடைபெற்ற அமைதி மாநாட்டில் டிரம்ப் முன்னிலையில் காஸா அமைதி ஒப்பந்தம் உறுதியானது. அதன் பின்னரும் மோதல் முற்றிலுமாக நிற்கவில்லை.

சண்டையிட்ட அண்டை நாடுகள்: எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தா மோன் தாம் கோயிலுக்குப் பரஸ்பர உரிமை கோரி தாய்லாந்து, கம்போடியாவுக்கு இடையே நடந்துவரும் மோதல் 2025இல் தீவிரமடைந்தது. ஜூலை 28இல் போர் நிறுத்தம் ஏற்கப்பட்ட பின்பும் தாய்லாந்து வான்வழித் தாக்குதல் நடத்தியது. பதற்றத்தைத் தணிக்க முயற்சிகள் நடக்கின்றன.

எண்ணெய்ப் போர்: வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் நோக்கில் அமெரிக்கக்கடற்படை, எண்ணெய் டாங்கர்களைச் சர்வதேச கடற்பகுதியில் பறிமுதல் செய்தது. 15,000 அமெரிக்க ராணுவத்தினர் கரீபியன் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இது ‘கடற்கொள்ளை’, ‘ராணுவ ஆக்கிரமிப்பு’ என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கொந்தளித்தார்.

உலகை உலுக்கிய ரகசியங்கள்: சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு தற்கொலை செய்துகொண்டவர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். அவருடன் பல முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான ஆவணங்கள் உலகை உலுக்கின.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்? - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்தார். எனினும், அதிகாரபூர்வமான ஒருமித்த ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. ராணுவ உதவிகளுக்குப் பதிலீடாக உக்ரைனின் கனிம வளங்களைப் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தைச் சாமர்த்தியமாக நிறைவேற்றிக்கொண்டார் டிரம்ப்.

50% வரி விதிப்பு: ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்வினையாக பெரும்பாலான இந்திய இறக்குமதிப் பொருள்களுக்கு 50% வரிவிதித்து (கூடுதலாக 25%) அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் இந்தியாவின் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல தொழிற்சாலைகள் மூடப்படும் ஆபத்தான நிலை உண்டாகி இருக்கிறது.

SCROLL FOR NEXT