அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சந்திப்புகள் நடக்கும்போதெல்லாம், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கியச் சொல் ‘துசிடீடஸ் பொறி’ (Thucydides Trap).
“வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது” என்பார்கள். ஆனால், வல்லரசுகளின் பேராசையும் அச்சமும் அதைத் தவிர்க்க முடியாத விதியாகவே மாற்றிவிடுகின்றன.
500 ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகரின் அசுர வளர்ச்சியைக் கண்டு ஸ்பார்ட்டா கொண்ட பயம், முழு கிரேக்கத்தையும் சுடுகாடாக மாற்றிய ‘பெலோபொன்னீசிய போருக்கு’ வழிவகுத்தது. இன்று, அதே வரலாற்று நிழல் உலக வல்லரசான அமெரிக்காவுக்கும், வேகமாக வளர்ந்து வரும் சக்தியான சீனாவுக்கும் இடையே படர்ந்துள்ளது.
“வளரும் ஒரு சக்தி, நிலைபெற்ற சக்தியின் இடத்தை நிரப்ப முயலும்போது போர் தவிர்க்க முடியாததாகிறது” எனும் துசிடீடஸின் கோட்பாடு மீண்டும் உயிர்பெறப் போகிறதா என்ற அச்சம் கிளம்பியிருக்கிறது.
உலக ஆதிக்கத்துக்கான போட்டி, தைவான் விவகாரம் மற்றும் வர்த்தகப் போர் ஆகியவை உச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில், சீனா ஏன் இந்த பண்டைய கிரேக்க எச்சரிக்கையை அமெரிக்காவுக்குத் தொடர்ந்து நினைவூட்டுகிறது? - இதோ ஒரு தெளிவுப் பார்வை...
‘துசிடீடஸ் பொறி’ பேசுபொருளானது ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்துப் பேசியபோது, இரு தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலில் ‘துசிடீடஸ் பொறி’ குறித்த கருத்து இடம்பெற்றதாக ப்ளூம்பெர்க் செய்திகள் தெரிவிக்கின்றன.
“சரியான புரிதலின் மூலம் இந்தச் சூழலை நம்மால் முறியடிக்க முடியும்” என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாயின. முன்னதாக பீஜிங்கில் நடந்த சந்திப்புகளின்போதும், “துசிடீடஸ் பொறி என்பதை நம்மால் முறியடிக்க முடியும்” என ஜின்பிங் வலியுறுத்தியிருந்தார்.
‘துசிடீடஸ் பொறி’ என்றால் என்ன?
பண்டைய கிரேக்கத்தில் (கி.மு.5-ஆம் நூற்றாண்டு) துசிடீடஸ் (Thucydides) என்ற புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் இருந்தார். அவர் எழுதிய ‘பெலோபொன்னீசியப் போரின் வரலாறு’ என்ற நூலில்தான் இந்தக் கோட்பாட்டின் மூலம் உள்ளது.
அதாவது, ஒரு சர்வதேச அமைப்பில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு வல்லரசுக்கு எதிராக, வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு வல்லரசு சவால் விடும்போது, அவற்றுக்கு இடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறுகிறது என்ற அரசியல் கோட்பாடே ‘துசிடீடஸ் பொறி’ என அழைக்கப்படுகிறது. இந்தக் கோட்பாட்டைப் பிரபலப்படுத்தியவர் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரான கிரஹாம் எலிசன் (Graham Allison) ஆவார்.
வரலாற்றுப் பின்னணி என்ன?
கி.மு.5-ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகரம் வணிகம் மற்றும் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து புதிய வல்லரசாக உருவெடுத்தது. ஆனால், பாரம்பரியமாக ராணுவ வலிமையுடன் ஆதிக்கம் செலுத்தி வந்த ஸ்பார்ட்டா, ஏதென்ஸின் வளர்ச்சியைக் கண்டு தன் பேரரசின் பாதுகாப்புக்கு ஆபத்து என அஞ்சியது. இரு நாடுகளின் அச்சமும் சந்தேகமும் இறுதியில் 27 ஆண்டுகள் நீடித்த ‘பெலோபொன்னீசியப் போருக்கு’ வழிவகுத்தது. இப்போரில் இரு நாடுகளுமே பலத்த சேதமடைந்தன.
இந்தப் போரைப் பற்றி வரலாற்று அறிஞர் துசிடீடஸ், ‘ஏதென்ஸின் அசுர வளர்ச்சியும், அது ஸ்பார்ட்டாவிடம் உருவாக்கிய அச்சமுமே இப்போரைத் தவிர்க்க முடியாதது ஆக்கியது’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பார்ட்டாவுக்கு ஏதென்ஸின் எழுச்சியைக் கண்டு ஏற்பட்ட பயமே உண்மையான காரணம் என்று துசிடீடஸ் நிறுவினார்.
கிரேக்கப் போருக்கும் அமெரிக்கா - சீனாவுக்கும் என்ன தொடர்பு?
பேராசிரியர் கிரஹாம் எலிசனின் ஆய்வின்படி, கடந்த 500 ஆண்டுகளில் உலகளவில் 16 சம்பவங்கள் இதுபோன்று நடந்து அதில் 12 சம்பவங்கள் இறுதியில் போரில்தான் முடிந்துள்ளன.
பண்டைய கிரேக்கத்தில் ஸ்பார்ட்டா வல்லரசாக இருந்ததுபோல தற்போது அமெரிக்கா இருக்கிறது. ஏதென்ஸ் அதிவேகமாக வளர்ந்ததுபோல தற்போது சீனா வளர்கிறது. ஏதென்ஸின் வளர்ச்சியைக் கண்டு ஸ்பார்ட்டா அஞ்சியதுபோலவே, தற்போது அமெரிக்காவும் தனது ஆதிக்கம் பறிபோய்விடுமோ என்று அஞ்சுகிறது. சீனா பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு இணையான சக்தியாக உருவெடுத்து வருவதால் ஏற்படும் பதற்றமே இவ்விரு நாடுகளையும் போரின் விளிம்புக்குத் தள்ளுகிறது.
சீன அதிபர் கூற்றும் பின்புலமும்
சீன அதிபர் ஜின்பிங், துசிடீடஸ் டிராப் குறித்த கருத்தை இப்போதல்ல, பலமுறை அமெரிக்கத் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தெரிவித்துள்ளார். ‘துசிடீடஸ் டிராப்பை நாம் முறியடிக்க முடியும், உலகில் அப்படி ஒரு கருத்து இல்லை, வல்லரசுகள் அப்படி ஒரு கருத்தை வளர்த்துக்கொண்டால், அந்த சதிவலையில் விழுந்துவிடுவோம்’ என்று எச்சரித்துள்ளார். அதையேதான் இந்த முறையும் சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா கவனமாக இருக்க வேண்டும் என்றும், அதேவேளையில் துசிடீடஸ் பொறியை இரு நாடுகளாலும் கடந்து செல்ல முடியும் என்றும் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஏனென்றால், தைவான் நாட்டை சீனா தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பாவித்து செயல்பட்டு வருகிறது.
ஆனால், தைவானோ தங்களை சுதந்திரக் குடியரசாக அறிவிக்க வேண்டும் என்று உலகச் சமூகத்தில் முறையீட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானு அமெரிக்கா ஆதரவு அளிப்பதையோ, அங்கு சென்று நட்பு பாராட்டுவதையோ சீனா விரும்பவில்லை.
அமெரிக்கா - சீனா மோதலுக்கான முக்கிய காரணங்கள்:
1. வர்த்தகப் போர்:
சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வரிகளை உயர்த்துகிறது. சீனா தனது ‘ஒரு மண்டலம் ஒரு பாதை’ மூலம் வர்த்தக வழிகளைக் கைப்பற்ற முயல்கிறது.
2. தொழில்நுட்ப ஆதிக்கம்:
செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களில் யார் உலகை ஆளப்போவது என்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.
3.தென்சீனக் கடல்:
தென்சீனக் கடலில் சீனாவின் உரிமைகோரலைத் தடுக்க, ஆசியக் கூட்டாளிகளுடன் அமெரிக்கா கடற்படைப் பாதுகாப்பை அதிகரிக்கிறது.
4. தைவான் விவகாரம்:
உலகின் 90%-க்கும் அதிகமான செமிகண்டக்டர்கள், மைக்ரோசிப்புகள் தைவானிலேயே தயாரிக்கப்படுகின்றன. சீனாவின் கைக்கு தைவான் சென்றால் தொழில்நுட்ப சாவி சீனாவிடம் சென்றுவிடும் என்பதால் தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்கிறது.
போரைத் தவிர்க்க முடியுமா?
தைவான் விவகாரம் போரை உருவாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டாலும், போர் என்பது தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. அமெரிக்கா தனது ராஜதந்திரக் கொள்கைகளைச் சரியாகக் கையாண்டு, நேரடி ராணுவ மோதலைத் தடுத்து, இரு நாடுகளும் தொடர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டால் இப்போரை நிச்சயமாகத் தவிர்க்க முடியும்.