உலகம்

பற்றி எரியும் காடுகள், போராடும் ஜென்ஸீ இளைஞர்கள்... - இந்தோனேசியாவில் நடப்பது என்ன?

போத்தி ராஜ்.க

பிரான்ஸ் முதல் கென்யா வரையிலும், நேபாளம் முதல் இந்தோனேசியா வரையிலும் ஒரே அலைதான் வீசுகிறது. அது  ஜென்ஸீ (Gen Z) தலைமுறையின் கோபக்குரல்.

பாரம்பரிய அரசியல் கட்டமைப்புகளையும், ஊழல் நிறைந்த ஆட்சி முறைகளையும் சகித்துக்கொள்ளத் தயாராக இல்லாத இன்றைய இளைஞர்கள், மாற்றத்துக்கான வித்தாக வீதிகளில் இறங்கி அதிகாரத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.

இந்தோனேசியாவில் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் வெடித்துள்ள இளைஞர்களின் கொந்தளிப்பு, வெறும் ஒரு நாட்டின் பிரச்சினை மட்டுமல்ல. மாறாக, காலநிலை மாற்றத்தின் சீரழிவையும் பொருளாதாரச் சுரண்டலையும் தாங்க முடியாத இளைய தலைமுறையினரின் வேதனைக் குரலாகும்.

தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய நாடாகத் திகழும் இந்தோனேசியா, தற்போது எல் நினோ (El Niño) தாக்கத்தாலும், மனிதர்களின் பேராசையாலும் லட்சக்கணக்கான ஏக்கர் காடுகளில் வரலாறு காணாத காட்டுத் தீயை சந்தித்துள்ளது.

இது, அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரையும் மூச்சுத் திணற வைத்துள்ளது. நாட்டின் உச்சக்கட்டப் பணவீக்கம், தாங்க முடியாத கல்விக் கட்டண உயர்வு, மலிந்துள்ள ஊழல் மற்றும் வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்களின் கோபம் எல்லைகளைக் கடந்து, பிராந்திய அளவிலான ஒரு சமூகக் கொந்தளிப்பாக உருவெடுத்துள்ளது.

‘வளர்ந்து வரும் பொருளாதாரம்’ என்ற ஒளிரும் பட்டத்துக்குப் பின்னால், கோடிக்கணக்கான மக்களின் அன்றாடத் துயரங்களும் வறுமையும் மறைந்திருக்கும் யதார்த்தத்தின் சாட்சியாக இந்தோனேசியா மாறியுள்ளது.

இயற்கையைப் பாதுகாக்கும் இளைஞர்கள்

2026-ம் ஆண்டு, ஜென்ஸீ இளைஞர்களின் பொறுமையைச் சோதிக்கும் ஆண்டாக மாறியுள்ளது. ஐரோப்பாவில் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும், ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா என 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இந்தோனேசியாவும் இளைஞர்களின் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இங்கு நிலவும் பிரச்சினை, மற்ற நாடுகளைப் போல ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார நெருக்கடியோடு நின்றுவிடாமல், சுற்றுச்சூழலையும் இயற்கையையும் பாதுகாக்க இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏன் காட்டுத் தீ?

இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் கோடை காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமானது என்றாலும், இந்த முறை ‘எல் நினோ’ பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட காட்டுத் தீ கொடூரத்தின் உச்சத்தைத் தொட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் காடுகள் தொடர்ந்து எரிவதால், அதில் ஏற்படும் நச்சுப் புகை நாட்டின் பெரும்பாலான நகரங்களுக்குப் பரவி மக்களை மூச்சு முட்ட வைக்கிறது.

நிலத்தையும் இயற்கையையும் அளவுக்கு மீறிப் பயன்படுத்தியதும், வணிக ரீதியான நடவடிக்கைகளுமே இக்காட்டுத் தீ பரவ முதன்மைக் காரணம் என்று தெரியவந்துள்ளது. பாமாயில் எனப்படும் பனை எண்ணெய் (Palm Oil) நிறுவனங்களும் சில தனிநபர்களும் விவசாய நிலங்களை உருவாக்குவதற்காகக் காடுகளுக்குச் சட்டவிரோதமாகத் தீ வைக்கும் வழக்கம் தொடர்கிறது.

இதனால், இந்தக் காட்டுத் தீ இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களின் பேராசையால் உருவானதா என்று துல்லியமாகக் கண்டறிய முடியாமலும், தீயைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசு திணறி வருகிறது.

எத்தனை ஏக்கர் பாதிப்பு?

நுசாந்த்ரா அட்லஸ் மற்றும் ஆரிகா (Auriga) ஆகிய சுற்றுச்சூழல் அமைப்புகளின் மதிப்பீடுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் சுமார் 15 லட்சத்தில் இருந்து 22 லட்சம் ஏக்கர் வரை, அதாவது 6,30,000 முதல் 9,00,000 ஹெக்டேர் பரப்பளவிலான காடுகளும் நிலங்களும் தீயில் சாம்பலாகியுள்ளன. இது சிங்கப்பூர் நாட்டின் பரப்பளவை விட கிட்டத்தட்ட 9 மடங்கு பெரிய பகுதியாகும். காளிமந்தன் பகுதியில் மட்டும் 6.84 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் சாம்பலாகியுள்ளன.

அரசுக்கு நெருக்கடியாக மாறியது எப்படி?

எல் நினோ பாதிப்பால், வழக்கத்தை விடச் சுமத்ரா, கலிமந்தான் மற்றும் பப்புவாவில் கடும் வறட்சியும் தாங்க முடியாத வெப்பமும் ஏற்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தோனேசியா சந்திக்கும் மிக மோசமான காட்டுத் தீ இதுவாகும். இதில் எழும் நச்சுப் புகையானது குடியிருப்புப் பகுதிகளை மூடியுள்ளதுடன், போக்குவரத்தைச் சீர்குலைத்து, பள்ளிகளையும் மூட வைத்துள்ளது. இதனால் நாட்டில் சுற்றுச்சூழல் அவசரநிலை ஏற்பட்டுள்ளது.

காட்டுத் தீயினால் ஏற்படும் நச்சுப் புகை மூட்டம் இந்தோனேசியாவைக் கடந்து அண்டை நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவையும் பாதித்துள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்குச் சுவாசம் சார்ந்த நோய்கள் உருவாகியுள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் தூதரக அளவிலான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜென்ஸீ ஏன் போராடுகிறார்கள்?

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த அரசு பல ஆண்டுகளாக எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஜென்ஸீ இளைஞர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

அரசு, பெரும்தொழிலதிபர்களுடன் கூட்டு சேர்ந்து ஊழலில் ஈடுபடுவதாகவும், அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்குச் சலுகைகள் வழங்குவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயர் கல்விக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதும், படித்த இளைஞர்களுக்கு முறையான வேலையில்லாமல் பெரும்பாலான வேலைகள் முறைசாராத் துறையிலேயே இருப்பதும் இளைஞர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பணவீக்கம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மக்களும் இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் ஜகார்த்தா, யோக்யாகர்தா, பெகன்பாரு, மகசார் ஆகிய நகரங்களில் அதிபர் சுபியாண்டோ மற்றும் துணை அதிபர் கிப்ரான் ராகாபுமிங் ராகா ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஜகார்த்தாவில் நடக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மட்டும் 9,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் முதன்மை கோரிக்கைகளில் முதலிடம் வகிப்பது, சுற்றுச்சூழல் அவசரநிலை. காட்டுத் தீயைத் தேசிய பேரிடராக அறிவித்து, அதற்குக் காரணமான பெரு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

இரண்டாவதாக, பொருளாதார நிவாரணம். அதாவது, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும்; கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

மூன்றாவது ஊழல் ஒழிப்பு. அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டங்களை வலுப்படுத்தி, சொத்து பறிமுதல் சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன.

அரசு என்ன சொல்கிறது?

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த 60,000-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் மூலம் நீரினைத் தெளித்தும், செயற்கை மழை பெய்விப்பதற்கான (Cloud Seeding) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்தோனேசிய அரசு தெரிவிக்கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT