உலகம்

பணக்கார நாடுகளின் பரிதாபம்: ஐரோப்பா முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரம் ஏன்?

போத்தி ராஜ்.க

ஐரோப்பாவை வெளியில் இருந்து பார்க்கும்போது, பனிமூடிய வீதிகளும் மினுமினுக்கும் கோபுரங்களும் வசந்தத்தின் அடையாளமாகவே காட்சியளிக்கின்றன. ஆனால், அந்த அழகிய சுவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான சாமானிய மனிதர்களின் அடுப்பாங்கரை எரியாமல், பூனைகள் ஓய்வெடுக்கும் இடமாக அடுப்புகள் மாறியுள்ளன.

அட்லாண்டிக் கடற்கரை முதல் ஆல்ப்ஸ் மலைத் தொடர் வரை ‘எங்களால் இனி வாழ முடியாது’ என்ற ஒற்றைக் குரல் எதிரொலிக்கிறது. ஒரு காலத்தில் உலக நாடுகளுக்குப் பொருளாதாரப் பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஐரோப்பிய வல்லரசுகள், இன்று சொந்த நாட்டு மக்களின் கோப அலைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நடுங்கிப் போய் நிற்கின்றன.

‘ஐரோப்பிய கனவு’ என்பது அனைத்து நாட்டு இளைஞர்களுக்கும் வர்ணிக்கப்பட்ட சொர்க்கபுரி. ஆனால், இன்று விலைவாசி உயர்வு, வீடில்லாச் சூழல், கல்வித் தரமின்மை மற்றும் பணவீக்கம் என்னும் தீயில் அது கருகிக் கொண்டிருக்கிறது. உழைக்கும் மக்களின் வியர்வையில் கட்டப்பட்ட மாளிகைகளில் இருந்து, ‘சிக்கனத்தைக் கடைப்பிடியுங்கள்’ என்று அதிகாரத்தில் இருப்போர் சொல்வதை வேடிக்கைப் பார்த்த மக்கள் இப்போது தெருக்களில் இறங்கியுள்ளனர்.

கோடீஸ்வரர்களின் லாபம் பெருகிக் கொண்டிருக்க, சாமானிய மக்களின் பாக்கெட்டுகள் காலியாகிக் கொண்டிருக்கின்றன. பணக்கார நாடுகள் என்று நாம் அழைக்கும் மேற்கத்திய நாடுகளின் உண்மை முகம் என்பது வறுமை, வேலையின்மை, சமூகப் பாதுகாப்பின்மை, வாழ்க்கைப் பாதுகாப்பு இன்மை என உயிர்வாழ்வதற்கான பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுப்பதாகவே உள்ளது.

பணக்கார நாடுகளில் வாழும் சாமானியர்களின் வேதனையின் யதார்த்தம் என்ன? மேற்கத்திய முதலாளித்துவத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கமா அல்லது ஒரு பெரிய மாற்றத்துக்கான எச்சரிக்கையா என்பதை சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்க்கலாம்.

போராட்டம் வெடிக்க காரணங்கள் என்னென்ன?

 எரிபொருள் - புவிசார் அரசியல்:

உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் மத்திய கிழக்கு மோதல்களால் மலிவான எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு விலைவாசி எகிறியது.

விலைவாசி - பணவீக்கம்:

எரிபொருள், மின்சாரம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்ததால், மக்களின் ஊதியம் வாடகைக்கும் உணவுக்கே சரியாக உள்ளது. விலைவாசி - பணவீக்கப் பிரச்சினை இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

வீட்டு வாடகை நெருக்கடி:

ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் இத்தாலியில் வீட்டு வாடகை, சாமானியர்களின் வருமானத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதால், எளிய மக்கள் சாலை ஓரங்களிலும் டெண்டுகளிலும் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஊதியத் தேக்கநிலை:

விலைவாசி 30 சதவீதம் வரை உயர்ந்த நிலையில், அதற்கேற்ப தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை. இதனால் வாங்கும் திறன் கடுமையாகச் சரிந்துள்ளது.

அரசின் சிக்கன நடவடிக்கைகள்:

 நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் அரசுகள் கைவைத்ததே மக்களின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

தொழில்துறை முடக்கம்:

மலிவான விலையில் எரிபொருள் கிடைக்காததால் ஐரோப்பிய தொழிற்சாலைகளின் உற்பத்திச் செலவு அதிகரித்து, சர்வதேச சந்தையில் போட்டி போட முடியாமல் முடங்கியுள்ளன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டது வேலையின்மை அதிகரிக்க காரணமாகியது.

எங்கிருந்து தொடங்கியது போராட்டம்?

பிரான்ஸில் செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்தப் போராட்டம் ஐரோப்பாவில் பல்வேறு நாடுகளுக்கு ஒரு மாதத்தில் பரவிய டைம்லைனை சற்று பார்ப்போம்.

பிரான்ஸ் (செப்.17):

கல்வித் தரமின்மை மற்றும் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி பிரான்ஸில் செப்டம்பர் 17-ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வீதியில் இறங்கினர். 2,500 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்பெயின் (செப்.26):

மாட்ரிட் நகரில் வசித்த 87 வயது மரியா மரிகார்மேன் அபாஸ்கல் என்ற மூதாட்டியை இரக்கமின்றி, ‘வாடகை தரவில்லை’ எனக் கூறி முதலீட்டு நிறுவனமும் போலீஸாரும் இணைந்து வீதியில் வீசியெறிந்தனர். இரண்டு வாரங்களில் மரியாவும் உயிரிழக்கவே, மக்கள் மவுனம் கலைந்து செப்டம்பர் 26-ல் இருந்து தீவிரப் போராட்டத்தில்  ஈடுபடத் தொடங்கினர்.

ஸ்பெயினில் வீட்டு வாடகை 2015 முதல் 2024-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 230 சதவீதம் உயர்ந்துவிட்டது. இது ஐரோப்பிய சராசரியை விட இருமடங்கு அதிகமாகும். ‘எக்ஸ்பான்சியோன்’ (Expansión) நாளேட்டின் செய்தியின்படி, ஸ்பெயினின் குறைந்தபட்ச ஊதியம் 1,221 யூரோக்கள் (1,370 டாலர்கள்). அதே சமயம், 80 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பிற்கான சராசரி மாத வாடகை சுமார் 1,130 யூரோக்கள் (சுமார் 1,270 டாலர்கள்) ஆகும். மீதமுள்ள தொகையை வைத்து மக்கள் எவ்வாறு வாழ்க்கையை நடத்த முடியும்?

மக்கள் குடியிருக்க வீடின்றியும், வாடகை தர முடியாமல் தவித்து வருவதை எதிர்த்து வீதிக்கு வந்து போராடினர். இதுதான் போராட்டத்தின் தீவிரத்தை உலகுக்குக் கொண்டு சேர்த்தது.

பெல்ஜியம் (அக்.1), இத்தாலி(அக்.5):

பெல்ஜியம், இத்தாலி இரு நாடுகளிலும் பணவீக்கம் (4.2%) , விலைவாசி உயர்வு, மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டித்து அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

போர்ச்சுகல் (அக்.10), அல்பேனியா(அக்.12):

போர்ச்சுகல் நாட்டிலும் விலைவாசி உயர்வு பிரச்சினைக்காக அக்டோபர் 10 முதல் மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர்.

அல்பேனியாவில் நடக்கும் போராட்டம் சற்று வித்தியாசமானது. அக்டோபர் 12-ம் தேதி முதல் ஆளும் அரசின் ஊழல்களை எதிர்த்து தலைநகர் டிரானாவில் பிரதமர் எடி ராமாவுக்கு எதிராகப் போராடி வருகிறார்கள். பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரி ‘ஃபிளமிங்கோ’ இயக்கத்தில் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்தபின் போராட்டம் தீவிரமடைந்தது.

பிரதமர் எடி ராமா தலைமையிலான அரசு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் சேர்ந்து ஒரு பிரம்மாண்டமான சொகுசு சுற்றுலாத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்தும், அரசின் மீது நிலவும் ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையின்மை மற்றும் பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரியும் மக்கள் போராடி வருகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகள் திணறுவது ஏன்?

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் திணறுவதற்கு ஆழமான கட்டமைப்புச் சிக்கல்களே காரணமாகும்.

சிக்கன நடவடிக்கைகளுக்கும், மக்கள் நலனுக்கும் இடையிலான முரண்பாடுகள், அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பலவீனக் கூட்டணி, எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் தொழில்துறை முடக்கம், முதியோர் மற்றும் ஓய்வூதியச் சுமை, புலம்பெயர்ந்தோர் மற்றும் குடியேற்றக் கொள்கை நெருக்கடி முதலானவற்றால் ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் திணறி வருகின்றன.

நாட்டின் ஜிடிபியை விட, கடன் அளவு அதிகமாக இருப்பதால், மானியங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் அரசுகள் உள்ளன. மேலும், ஐரோப்பாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஓய்வூதியச் சுமை பலமடங்கு உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் அகதிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதால், சொந்த நாட்டு மக்களுக்கே வீடுகளும் வேலைவாய்ப்புகளும் கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. இது சமூகப் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சுருக்கமாகச் சொன்னால், ஐரோப்பிய அரசுகள் காலத்துக்கேற்ப தங்களின் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்கவில்லை. புதிய மாற்றங்களை நோக்கி நகர நிதிப் பற்றாக்குறை தடுக்கிறது. அதேநேரம் தற்போதைய சூழலைத் தொடரவும் மக்களிடம் பணமில்லை. இந்த முரண்பாடான சுழலில்தான் ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் எவ்விதத் தீர்வும் காண முடியாமல் திணறி வருகின்றன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT