ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்
டெஹ்ரான்: அமெரிக்காவுடனான போரில் ஈரானின் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டு விட்டதாக அந்நாட்டின் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜூன் 17-ம் தேதி ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 60 நாள் போர் நிறுத்தம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கப்பல்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றப் போவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து மிரட்டி வருகிறார். அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ஈரானும் எச்சரித்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அளித்த பேட்டியில்,“அமெரிக்காவுடனான போர் முடிவுக்கு வர வேண்டும். ஏனெனில் இந்தப் போரில் எங்கள் வெற்றியை உலக நாடுகளே அங்கீகரித்துள்ளது. அமெரிக்கா மீது உலகளவில் வெறுப்பு நிலவுகிறது” என்றார்.
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் ஈரான் அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார தடைகள் குறித்து பேசிய ட்ரம்ப், “ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிலான பொருளாதாரத் தடைகள் மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும். ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை கைவிடச் செய்வதோடு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கப்பல்களுக்கு முக்கிய வழித்தடமாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்கும்படி ஈரானை வற்புறுத்துவதே இதன் நோக்கமாகும்” என்றார்.