தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் நாய்கள் மூலம் பரவும் ரேபிஸ் (வெறி நாய்க்கடி) நோயை ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக முழுமையாக ஒழித்த முதல் நாடு என்ற சாதனையை பூடான் படைத்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
பல்வேறு ஆசிய நாடுகளிலும் நாய்த் தொல்லையும், வெறி நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் நோயும் மிகப் பெரிய பொது சுகாதாரப் பிரச்சினையாக இருக்கும் சூழலில், பூடான் போன்றதொரு சிறிய நாட்டில் ரேபிஸ் பொதுச் சுகாதாரப் பிரச்சினையில்லை என்ற நிலை சாத்தியமானது எப்படி என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
ரேபிஸ் - ஃப்ரீ எப்படிப் புரிந்து கொள்வது?
உலக சுகாதார நிறுவனம் எந்தவொரு நாட்டையும் ரேபிஸ் நோய் அற்ற நாடாக இதுவரை அறிவிக்கவில்லை. பூடானுக்கு அளித்துள்ள அங்கீகாரமானது, நாய்களால் பரவும் ரேபிஸ் நோய் பொதுச் சுகாதார பிரச்சினையாக இல்லாத நிலை என்பதற்கான அங்கீகாரமே.
அப்படியான அங்கீகாரத்தை வழங்க உலக சுகாதார நிறுவனம் சில அடிப்படைத் தகுதிகளை வகுத்து வைத்துள்ளது. அதன்படி ஒரு நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு வெறி நாய்க்கடி (ரேபிஸ்) நோயால் ஒரே ஒரு மனித உயிரிழப்பு சம்பவம் கூட நிகழாமல் இருக்க வேண்டும். கூடவே, இனியும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் தேவையான கட்டமைப்புகளையும் தொடர்ந்து உறுதிப்படுத்தும் நிலையில் அந்த நாடு இருக்க வேண்டும்.
அந்த வகையில் பூடானில் கடைசியாக ரேபிஸ் நோயால் மனித உயிரிழப்பு நேர்ந்தது ஜூன் 2023-ல். அதன் பின்னர் அங்கு ரேபிஸ் உயிரிழப்பு ஏற்படவில்லை. அதற்கு தீவிர கண்காணிப்பு, நாய்களுக்கு தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல், நாய்க் கடிக்கு உள்ளானவர்களுக்கு post-exposure prophylaxis (PEP) நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பூடான் திறம்பட மேற்கொண்டதே காரணம் எனக் கூறப்படுகிறது.
இன்றும்கூட உலகளவில் விலங்கு வழி பரவும் மிக மோசமான, அதேவேளையில் அதிகம் கவனம் செலுத்தப்படாத நோயாக ரேபிஸ் இருக்கிறது. உலகளவில் ஆண்டுதோறும் 74,000 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழக்கின்றனர். தெற்காசிய பிராந்தியத்தில் மட்டும் ஆண்டுக்கு 36 ஆயிரம் ரேபிஸ் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. உலக சராசரியில் இது சரி பாதி. ரேபிஸ் உயிரிழப்புகளில் கிராமப்புற குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பது இன்னொரு வேதனை புள்ளிவிவரம்.
பூடானின் ‘ஒன் ஹெல்த்’ அணுகுமுறை...
ரேபிஸ் நோயை தடுப்பதில் பல்வேறு சவால்களும் இருக்கும் சூழலில், பூடான் அதை ‘ஒன் ஹெல்த்’ அணுகுமுறை மூலம் சாத்தியமாக்கியிருக்கிறது.
ஒன் ஹெல்த் அணுகுமுறை (One Health approach) என்பது மனித சுகாதாரம், கால்நடை மருத்துவம், உள்ளாட்சி அமைப்புகள் என தனித்தனியாக இயங்காமல் Inter-Ministerial Committee on One Health (IMCOH) மூலம் பட்ஜெட், டேட்டா, களப்பணியை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது.
உதாரணத்துக்கு, ரேபிஸ் நாய்க்கடி பதிவானதும், கால்நடை மற்றும் மக்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஒன்றுபட்டு வேறு யாருக்கும் வெறிநாய்க்கடி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்வதையும், கூட்டாக கள ஆய்வை மேற்கொள்வதையும் சுட்டிக்காட்டலாம்.
இந்த ஒன் ஹெல்த் முறையைப் பின்பற்றித்தான் பூடான் வெறிநாய்க் கடி பொதுச் சுகாதார பிரச்சினையில்லை என்ற நிலையை எட்டியுள்ளது.
இரண்டே நடவடிக்கைகள் தான்..
ஒன் ஹெல்த் அணுகுமுறையோடு, ரேபிஸ் தடுப்பில் உலக சுகாதார நிறுவனம் வகுத்துக் கொடுத்த 2 உத்திகளை பூடான் திறம்பட செயல்படுத்தியதும் இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
ஒன்று, நாய்களுக்கு தீவிர தடுப்புபூசித் திட்டம் mass dog vaccination (MDV), இரண்டாவது, நாய்க்கடிக்க்கு உள்ளானவர்களுக்கு ரேபிஸ் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் சிகிச்சை ஆகியனவற்றில் அதீத கவனம் செலுத்துவது.
நாய்களுக்கு தடுப்பூசி வழங்குவதை தீவிரப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் ரேபிஸ் வைரஸ் சுழற்சியைக் கட்டுப்படுத்த முடியும். நாய்க்கடிக்கு பிந்தைய மனிதர்கள் கடிபட்ட இடத்தை கடினமான சோப்பு போட்டு நீரில் நன்றாகக் கழுவுவது தொடங்கி, தடுப்பூசி, தேவைப்படின் இம்யூனோ குளோபுளின் வரை வழங்குவது வரை விழிப்புணர்வு ஏற்படுத்தி செயல்படுத்துவது மனித உயிர்களைப் பாதுகாக்கும்.
இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக பூடான் அரசு நாய்களுக்கான தீவிர தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. 70% நாய்கள் வெறிநோயை தடுக்கும் தடுப்பூசியை சரியான சுழற்சியில் பெற்றவையாக வைப்பது வைரஸ் சுழற்சியை தடுக்கும். இதற்காக தடுப்பூசி வழங்கும் குழுக்கள் கிராமங்கள் தோறும் செயல்பட்டுள்ளன.
பூடானின் கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தியப் பகுதி என 20 மாவட்டங்களிலும் இது முறையாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், தடுப்பூசி பெற்ற நாய்களின் கழுத்தில் பட்டை அணிவிக்கப்படுகிறது, இல்லையேல் பெயின்ட் மூலம் அடையாளம் ஏற்படுத்தப்படுகிறது.
அதுமட்டுமல்லாது நாய்கள் - மக்கள் தொகை நிர்வாகத்தையும் சரியாகச் செய்கிறது. இதற்காக நாய்களுக்கு சரியான நேரத்தில் கருத்தடை சிகிச்சை செய்யப்படுகிறது. இதன்மூலம் தெருவில் திரியும் பராமரிப்பாளர்கள் அற்ற நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
கற்க வேண்டிய பாடம் என்ன?
ரேபிஸ் தடுப்பு வழிமுறைகள் எல்லா நாடுகளுக்கும் ஒன்ருதான் என்றாலும் கூட நல்ல நிர்வாகத்தின் மூலம் பூடான் அதை சாத்தியப்படுத்தியுள்ளது. அது பின்பற்றிய ஒன் ஹெல்த் மாடல், வெறிநாய்க்கடிக்கு உள்ளான மனிதர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துவதைவிட, நாய்களுக்கு 100% தடுப்பூசி, கருத்தடை மூலம் வைரஸ் பரவலை தடுப்பது, வீடு வீடாகச் சென்று நாய்களுக்கு தடுப்பூசி போட்டது, நாடு முழுவதும் தடையின்றி இலவச PEP தடுப்பூசி கிடைக்கச் செய்தது ஆகியன பூடான் மாடலின் சிறப்பு.
ஆசியாவின் பிற நாடுகளும் ரேபிஸ் உயிரிழப்பை பூஜ்ஜியமாக்க முடியும் என்பதற்கு பூடான் நேரடி உதாரணம்.