அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

 
உலகம்

வெற்றி, தோல்வி மற்றும் பல... ஈரான் போரில் ட்ரம்ப்புக்கு கிட்டியது என்ன?

பாரதி ஆனந்த்

ஈரானும் அமெரிக்காவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாம் சரியாகச் சென்றால் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஈரானும் அமெரிக்காவும் போரை நிறுத்திக் கொள்ளும் அந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகிவிடும். அதை ‘அமைதி ஒப்பந்தம்’ என்பதைவிட ‘புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என்றே சம்பந்தப்பட்ட நாடுகள் அழைக்கின்றன. காரணம் அமைதி ஒப்பந்தம் சட்டப்பூர்வமான பிணைப்பு கொண்டது. ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தம் அப்படியானது அல்ல.

ஒப்பந்தம் எந்த வகையிலானதாக இருந்தாலும் சரி. அது நிறைவேறட்டும் என்று உலக நாடுகள் எதிர்பார்த்து நோக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், மாடர்ன் உலகம் சமீப காலங்களில் கண்ட போர்களைப் போல் அல்லாது இந்தப் போர் எரிசக்தி விநியோகத்தில் உலகின் கிழக்கு - மேற்கு; வடக்கு - தெற்கு என பாரபட்சமின்றி பாதிப்புகளை ஏற்படுத்தியதே!

மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அந்த ஒப்பந்தத்தில் என்னவிருக்கிறது என்று இதுவரை பொதுவெளியில் தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், ஒப்பந்தம் முறைப்படி கையெழுத்தான பின்னர்தான் போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வருமென்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து ஒரு சந்தேகப் புள்ளியை வைத்திருக்கிறது.

ஒரு சின்ன ரீவைண்ட்

4 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. அப்போது, ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்துவதற்காகவே இந்தத் தாக்குதல் என்று விளக்கமும் அளிக்கப்பட்டது.

ஆனால், முதல் தாக்குதலில் ஈரானின் பள்ளிக்கூடத்தில் 170+ குழந்தைகள் உயிரிழந்தனர். ஈரான் - இஸ்ரேலின் தாக்குதலுக்கான காரணத்துக்கும், பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதற்குமான தொடர்பு என்னவாக இருந்துவிட முடியும் என்ற கேள்வி இன்றளவும் நீடிக்கிறது.

ஈரானின் உச்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, பிப்ரவரி 28, 2026 அன்று அதாவது போர் தொடங்கிய முதல் 12 மணி நேரத்துக்குள் கொல்லப்பட்டார். அத்தோடு, இனி அடுத்து யார் உச்ச தலைவராக வந்தாலும் கொல்லப்படுவார் என்ற எச்சரிக்கையையும் விடுத்தது.

தொடர்ந்து ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலர் அலி லாரிஜானி, இஸ்லாமிய புரட்சிகர படையின் தளபதி எனப் பலரையும் தீர்த்துக் கட்டியது அமெரிக்கா. இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாக கொலைவெறித் தாக்குதல் நடத்த ஈரானும் பதிலடி கொடுக்கத் தொடங்கியது.

உலகத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் 25% நடக்கும் முக்கிய மார்க்கமான ஹார்மூஸ் நீரிணையை மூடியது ஈரான். விளைவு, கச்சா எண்ணெய் விலை விர்ரென ஏறியது. ட்ர்ம்ப் மீது குற்றச்சாட்டுக் குரல்கள் வலுக்க இந்தியா உள்பட உலக நாடுகள் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என்று முந்தைய உத்தரவில் சிறிய தளர்வையும் சகாயமாக நல்கியது அமெரிக்கா.

இந்தப் போரில் பக்கவாட்டுச் சேதாரமாக, ஈரானுக்கு ஹிஸ்புல்லாக்கள் ஆதரவு கொடுக்க இன்றளவும் லெபனானை சிதைத்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

அமெரிக்க ராணுவக் கட்டமைப்புகளுக்கு இடம் கொடுத்திருந்ததற்காகவே ஓமன், குவைத், சவுதி அரேபியா என வளைகுடா நாடுகளை ஈரான் அவ்வப்போது தாக்கியது. இப்படியாக மேற்காசியா முழுவதும் போர்ப் பதற்றமும், பிற நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு என பொருளாதார பாதிப்புகளும் எதிரொலித்தன.

இந்தப் போர், எரிசக்தி துறையில் ஈரானின் பொருளாதார செல்வாக்கு என்னவென்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது. அதனால்தான், ‘ஹார்மூஸ் நீரிணையைப் பயன்படுத்த இனி சுங்கம் கட்டுங்கள்!’ என்ற கெடுபிடியையும் ஈரான் அறிவித்தது.

இந்தச் சூழலில்தான் பாகிஸ்தானின் மத்தியஸ்த முயற்சியால் ஏப்ரல் 8 முதல் இருவார கால தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. தற்காலிக அமைதி உடன்பாடுகள் 60 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டு, ஜூன் மாத மத்தியில் போர் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூன் 19-ஐ நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.

பிப்ரவரி 28 2026 தொடங்கி இதுவரையிலான சம்பவங்கள் மேற்காசியப் போர் என்ன செய்யும் என்ற பயத்தை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையுயர்வும், சமையல் எரிவாயு விலை உயர்வும் ஏற்பட்டிருக்கிறது. உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் சரியாக இன்னும் சில, பல மாதங்கள் ஆகலாம் என்றே பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

போரில் வென்றது யார்?!

இந்தச் சூழலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கும் இவ்வேளையில் போரில் வெற்றி யாருக்கு என்று கேட்டால். எந்தப் போரிலும் வெற்றி, தோல்வியென்று ஏதுமில்லை என்பதே உண்மை.

என்றாலும், ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் ட்ரம்ப் - நெதயான்குவிடமிருந்து வெற்றி அறிக்கையும், ஈரானிடமிருந்தும் அதனுடைய வெர்ஷன் அறிக்கையும் எதிர்பார்க்கப்படுகிறதுதான்.

பொதுவாகவே போரில், இழப்புகள் யாருக்கு அதிகம் என்று எப்போதுமே கணக்கிடப்படும் வழக்கமே. அந்த வகையில் அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டு தாக்குதலால் ஈரான், லெபனானில் உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கின்றன. அமெரிக்க தரப்பில் அதன் ராணுவ பராக்கிரம அடையாளங்களான எஃப் 15 போர் விமானம், அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஈரான் சுட்டுவீழ்த்தியது அமெரிக்காவின் பெருமை பீற்றலுக்கு ஒரு ஷாக்!

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள், கடற்படை தளங்கள், தொழில் தளங்களில் 80% அழிக்கப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேலையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈரான் எவ்வளவுக்கு எவ்வளவு பலவீனமாகிறதோ அந்த அளவுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு உறுதியாகும். அதனால்தான் ட்ரம்ப்பை ‘ஆபரேஷன் எபிக் ஃப்யூரி’ என்ற இந்த கோரத் தாண்டவத்துக்கு நெதன்யாகு தூண்டிவிட்டிருக்க வேண்டும் என்று சர்வதேச போர் நிலவர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2025-ல் அமெரிக்கா ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என்று ஈரானை 12 நாட்கள் தாக்கவும் நெதன்யாகுவின் தூண்டுதலையே அவர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.

உலகமே காசா போர் பற்றிப் பேச, நெதன்யாகு சாதுர்யமாக ஈரானை பலவீனப்படுத்துதல், லெபனானை இன்னும் அதிகமாகத் தாக்கி தகர்த்தல், காசா மீதான சர்வதேச கவனத்தைத் திசை திருப்புதல், உள்நாட்டில் தனக்கு இருக்கும் எதிர்ப்பை ஆறப்போடுதல் எனப் பல காய்களை ஒரே மூவில் நகர்த்தியிருக்கிறார் என்கின்றனர் அவர்கள்.

‘தோற்றுப்போன’ ட்ரம்ப்!

அதேபோல் ட்ரம்ப் இந்தப் போரில் தோற்றுவிட்டதாகவே வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் குறிப்பிடுகின்றன.

இஸ்ரேலுடன் இணைந்து கடந்த ஜூன் 2025-ல் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய 12 நாள் தாக்குதலிலேயே ஈரானின் அணுசக்தி திட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் நிறுத்தியிருந்தால், ஈரான் மீதான போரில் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், இன்று அமெரிக்காவின் எஃப் 15, அப்பாச்சி போர் தளவாடங்களை இழந்து, 4 மாதங்களில் ஈரானை பணியவைக்க முடியாமால் திணறி இதை இறுதிக்கட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்.

போரை தொடங்குவதற்கு முன்னர் ஈரானில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தபோது, ‘அமெரிக்காவிடமிருந்து உதவி வருகிறது’ என்றார். ஆனால் ஈரானிய ஜனநாயகத்தைப் பாதுகாக்க அவர் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. மேலும், போர் ஆரம்பித்த பின்னர் அணு ஆயுத தயாரிப்பைத் தடுப்பது குறித்து ஈரான் ஆட்சியாளர்களுடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டுவது நோக்கித்தான் அவருடைய குறி இருந்தது.

இன்னும் சொல்லப்போனால், எதற்காக இந்தப் போரைத் தொடங்கினோம் என்ற தெளிவான இலக்கு இல்லாமலேயே போரை ட்ரம்ப் தொடங்கியதே அவருடைய மிகப் பெரிய தோல்வி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பதைத் தடுக்கவே போர் என்று பிப்ரவரி 2026-ல் சொன்னவர், 2025 ஆகஸ்ட்டில் “ஈரான் எப்போதுமே அணு ஆயுதத்தை தயாரிக்க முடியாது என்பதை நான் உறுதி செய்துவிட்டேன்”, என்றார். இரண்டு ஸ்டேட்மென்ட்களுக்கும் எத்தனை பெரிய முரண் என்று அயல்நாட்டு ஊடகங்கள் விளாசுகின்றன.

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், உலக நாடுகள் மீது இறக்குமதி வரி விதித்து உள்நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டார். அதில் சறுக்கல்கள் ஏற்பட, ஈரான் மீது போரை தொடுத்தார் என்பதே நிபுணர்கள் இன்னொரு கணிப்பாக இருக்கிறது.

“ட்ரம்ப் ஓர் ஆணவக்காரர். பொறுப்பற்றவர், ஒரு நாட்டை தலைமையேற்று நடத்துவதில் இருக்கும் வரையறைகளை வெறுப்பவர்,” என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கும் ‘தி இன்டிபென்டன்ட்’ ஊடகம், ட்ரம்ப் முதன்முறையாக அதிபராக இருந்தபோது தன் ஆட்சி மீதான விமர்சனங்களை அவருடைய ஆட்சிக் காலத்தின் கடைசியில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்றின் மீது தூக்கிப் போட்டார்.

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபின்னர், அவருடைய வர்த்தகப் போர்களின் சுமையால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அவருடைய பிரதானப் பணி பிரம்மாண்டமான சுயவளமாக்கலாகவே இருந்துள்ளது.

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது முதலீட்டு ஆலோசகர்கள் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் சுமார் 3,700-க்கும் மேற்பட்ட பங்கு வர்த்தக பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர்” என்ற செய்தி அண்மையில் வெளியாகி மிரள வைத்தது நினைவிருக்கலாம்.

ஒரு நாட்டின் அதிபர் போரை அறிவித்தால், அதற்கான காரணத்தை நாட்டு மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம். அந்தக் காரணம் மக்களை சமாதானப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம், போரை நடத்த நாடாளுமன்ற ஒப்புதலையாவது பெற்றிருக்க வேண்டும். ஆனால், இவை எதுவுமே இல்லாமல் அவர் தொடங்கிய இந்தப் போர் ட்ரம்ப்புக்கு தோல்வி மட்டுமே என்கின்றனர் நிபுணர்கள்.

“ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் வளங்களைத் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சி முறை ‘Kleptocracy’ என்றழைக்கப்படுகிறது, கிட்டத்தட்ட ட்ரம்ப் அதைத்தான் செய்கிறார்,” என்று விமர்சிக்கிறது வெளிநாட்டு ஊடகம் ஒன்று.

இந்தப் பின்னணிகளைக் கொண்டு பார்க்கும் போது இஸ்ரேல் தூண்டுதலில் வலுவான காரணமே இல்லாமல் ஈரான் போரை அமெரிக்கா நடத்தி, ஈரானிடமும், ஹார்மூஸ் நீரிணை மூடலால் உலகத் தலைவர்கள் மத்தியிலும் ட்ரம்ப் தோற்று நிற்பதாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT