உலகம்

தமிழர்களுக்கு பெருமை சேர்த்த நவி பிள்ளை யார்? - அமைதிக்கான நோபல் பரிசும் பின்புலமும்

போத்தி ராஜ்.க

சர்வதேச சட்டத்தின் வழியே உலகளாவிய அமைதியை நிலைநாட்டவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர்,  தென்னாப்பிரிக்கச் சட்ட வல்லுநர், சர்வதேச நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்து அலங்கரித்தவர், மனித உரிமைக் காவலாளி என்று போற்றப்பட்ட  இந்தியரான, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருமான நவநீதம் பிள்ளைக்கு (நவி பிள்ளை), 2026-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இனவெறி ஆட்சிக் காலத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தனது சொந்த மண்ணில் வழக்கறிஞராகத் தொடங்கிய நவநீதத்தின் பயணம், இன்று சர்வதேச நீதியின் குறியீடாக உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், வறுமையின் பிடியிலிருந்து தப்பிக்கத் தமிழகத்தின் கிராமங்களிலிருந்து தென்னாப்பிரிக்காவின் கரும்புத் தோட்டங்களுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஏற்றி அனுப்பப்பட்ட எளிய மனிதர்களின் வம்சாவழியில் வந்தவர் நவி பிள்ளை.

அடிமைத்தனத்தின் தடயங்களைச் சுமந்த ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்த பெண், பிற்காலத்தில் உலகத்தின் மிக உயரிய விருதான அமைதிக்கான நோபல்  பரிசை வெல்வார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆப்பிரிக்க மண்ணில் வேரூன்றி, உலகம் முழுவதும் நீதியின் விதைகளைத் தூவிய ஒரு தமிழின மகளின் வரலாற்றுச் சுவடு இது.

அதிகாரப்பசி, இனவெறி, போர் என மனித உரிமைகள் மிதிக்கப்படும்போது எல்லாம், பாதிக்கப்பட்ட மக்களின் ஒரே நம்பிக்கையாகத் திகழ்ந்தது சர்வதேசச் சட்டம். அந்தச் சட்டத்துக்கு உயிரையும் வலிமையையும் கொடுத்தவர் நீதிபதி நவி பிள்ளை.

தென்னாப்பிரிக்காவின் ராபன் தீவு சிறைச்சாலை முதல் தி ஹேக் (The Hague)சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் வரை, அதிகார வர்க்கத்தின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, ‘மனித உரிமைகள் யாருக்கும் மறுக்கப்படக் கூடாது’ என்று முழங்கியவர் நவி பிள்ளை.

வறுமையான இளமைக் காலமும் கல்வியும்

1890-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கரும்புத் தோட்ட வேலைகளுக்காக நவி பிள்ளையின் தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் தமிழகத்தில் இருந்து தென்னாப்பிரிக்காவின் நடால் (Natal)பகுதிக்குச் சென்றனர். 1941-ஆம் ஆண்டு பிறந்த நவநீதத்தின் பெற்றோர் நாராயணசாமி - சாந்தம்மாள் இணையராவர். இவர்களுக்கு மொத்தம் 8 குழந்தைகள். அதில் ஐந்தவதாக பிறந்தவர் நவநீதம்.

தந்தை நாராயணசாமி ஓட்டுநராகப் பணியாற்றினார்; தாயார் சாந்தம்மாள் இல்லத்தரசி. வறுமை, நிறவெறி மற்றும் வெள்ளையர்களின் ஆதிக்கம் நிலவிய இக்கட்டான சூழலில்தான் நவநீதம் வளர்ந்தார். குடும்பத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை சிறுவயதிலிருந்தே நவநீதத்துக்கு அவரது பெற்றோர் கற்றுக்கொடுத்தனர்.

தென்னாப்பிரிக்காவில் பெரும்பாலான சிறுமிகளுக்குச் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், நவநீதமும் அவரது சகோதரிகளும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதில் அவரது பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் நிதியுதவியால் நவநீதம் 1963-இல் நடால் பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டப் பட்டத்தையும், 1965-இல் சட்ட இளங்கலைப் பட்டத்தையும் பெற்றார். பின்னர், 1982-ஆம் ஆண்டு ஹார்வர்டு சட்டப் பள்ளியில் பயின்று முதுகலைப் பட்டத்தையும் (LL.M.), 1988-இல் சட்ட அறிவியலில் முனைவர் பட்டத்தையும் (S.J.D.) பெற்றார். ஹார்வர்டு சட்டப் பள்ளியில் இருந்து சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் தென்னாப்பிரிக்கப் பெண் நவநீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞர் பணியும் மனித உரிமைப் போராட்டமும்

1967-ஆம் ஆண்டு நடால் மாகாணத்தில் சொந்தமாகச் சட்ட நிறுவனம் தொடங்கிய முதல் வெள்ளையினத்தவர் அல்லாத பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை நவி பிள்ளை பெற்றார். இனவெறிக்கு எதிரான காலகட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, ராபன் தீவுச் சிறையிலிருந்த நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். சிறையில் அரசியல் கைதிகளுக்கு நடந்த அநீதிகள், சித்திரவதைகள் மற்றும் மோசமான சூழல்களை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டினார்.

1995-ஆம் ஆண்டு நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்து, தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, அதிபர் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் கருப்பினப் பெண் நீதிபதியாக நவநீதத்தை நியமித்தார். தென்னாப்பிரிக்க வரலாற்றிலேயே முதல் கருப்பினப் பெண் நீதிபதி என்ற பெருமையை அவர் பெற்றார்.

‘வன்புணர்வு இனி போர்க்குற்றம்’

1995 முதல் 2003-ஆம் ஆண்டு வரை ருவாண்டா சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICTR) நவநீதம் பணியாற்றினார். இதில் 1999 முதல் 2003 வரை 4 ஆண்டுகள் தலைமை நீதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.

நவநீதம் நீதிபதியாக இருந்தபோது, போர்க் காலத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை ‘இனப்படுகொலையின் ஒரு பகுதி’ எனக் கருத வேண்டும் என்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். ‘ஜீன்-பால் அகாயேசு’ வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பு பன்னாட்டுச் சட்ட வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாகும்.

ஒரு நேர்காணலில் நவநீதம் கூறுகையில் “தொன்றுதொட்டு, ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்வது போரின் கொள்ளைப் பொருளாகக் கருதப்பட்டு வந்தது. இனி அது போர்க்குற்றமாகக் கருதப்படும். வன்புணர்வு என்பது இனி போரின் வெற்றிக்கோப்பை அல்ல என்ற வலுவான செய்தியை உலகிற்குச் சொல்ல விரும்புகிறோம்” என்று கம்பீரமாகத் தெரிவித்தார்.

அதன்பின், தி ஹேக்கில் உள்ள பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகப் பணியாற்றினார். 2008 முதல் 2014 வரை ஐ.நா-வின் மனித உரிமைகளுக்கான முதன்மை ஆணையராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார்.

வரலாற்றுத் தீர்ப்புகளும் சர்வதேச வழக்குகளும்

இலங்கைத் தமிழர் உரிமை: 2009-இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு, அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாகச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு உறுதியாகக் குரல் கொடுத்தார்.

ஊடக வழக்கு (2003): ICTR ஊடக வழக்கில், ஊடகங்கள் மூலமாக இனவெறுப்பையும் தூண்டுதலையும் பரப்புவது சர்வதேசச் சட்டப்படி போர்க்குற்றத்துக்கு இணையானது எனத் தீர்ப்பளித்தார்.

LGBTQ+ உரிமைகள்: ஐ.நா-வின் வரலாற்றிலேயே முதன்முறையாகப் பாலினச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ‘Free & Equal’ என்ற உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

பாலஸ்தீன விவகாரம்: ஓய்வுக்குப் பிறகும், 2021-இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் குறித்து ஐ.நா அமைத்த சுதந்திரமான விசாரணைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டு ஆய்வுகளை வழிநடத்தி வருகிறார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை ஆகிய கொள்கைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து 2026 நோபல் அமைதிப் பரிசை வென்ற நவி பிள்ளையின் பயணம் உலகளாவிய மனித உரிமைப் போராட்டங்களுக்கு மிக முக்கிய வழிகாட்டியாகும்.

SCROLL FOR NEXT